களக்காடு : நாங்குநேரி அருகே வீட்டு மண் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் பலியானார்.நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை அடுத்துள்ள பாண்டிசேரியை சேர்ந்தவர் அப்பாவு (75). கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி பார்வதியுடன் மண் சுவரால் ஆன வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வந்த மழையின் காரணமாக வீட்டு மண் சுவர் ஸ்திரதன்மையை இழந்து காணப்பட்டுள்ளது.
இதனையறியாத அப்பாவு நேற்று முன்தினம் மாலை வீட்டு முன்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது திடீர் என வீட்டின் மண் சுவர் இடிந்து அப்பாவு மீது விழுந்தது. இதில் அவர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார். அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டனர். ஆனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இரவில் அவர் உயிரிழந்தார்.
இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான அப்பாவுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனது குடும்பத்தினர்களுடன் தனியாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post நாங்குநேரி அருகே சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி appeared first on Dinakaran.