×

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் சம்பத் நகர்-நசியனூர் ரோடு இணைப்பு சாலையில் சிக்னல் அமைக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஈரோடு : நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஈரோடு சம்பத் நகர் – நசியனூர் இணைப்பு சாலை பகுதியில் சிக்னல் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஈரோடு கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சம்பத் நகர் சாலை அதன் மறு எல்லையான நசியனூர் சாலையில் இணைகிறது.

நகரின் முக்கிய பகுதியாக உள்ள இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. சம்பத் நகர் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் அரசு ஊழியர் குடியிருப்புகள் என பல்வேறு வகையான குடியிருப்புகளும் உள்ளன.

இதேபோல, சம்பத் நகர் சாலை இணையும் நசியனூர் சாலையானது இடையன்காட்டு வலசு, அண்ணா தியேட்டர், பெரிய வலசு மற்றும் மாணிக்கம்பாளையம், நாராயண வலசு உள்ளிட்ட பகுதிகளுக்கான பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை தினமும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.இந்நிலையில், கலெக்டர் அலுவலக பகுதியிலிருந்து சம்பத் நகர் வழியாக வரும் வாகனங்கள் நசியனூர் சாலையை அடைந்து வலது புறம் திரும்பி இடையன்காட்டு வலசு, அரசு மருத்துவமனை ரவுண்டனா, பேருந்து நிலையம், பன்னீர் செல்வம் பார்க் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளுக்குச் சென்று வருகின்றன.

அதேபோல, சம்பத் நகர் கார்னரில் இருந்து இடது பக்கம் திரும்பி நசியனூர் ரோடு வழியாக நாராயண வலசு, மாணிக்கம்பாளையம் மற்றும் நசியனூர் மார்க்கமாக பல்வேறு பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்கின்றன.

அதேபோல நசியனூர் சாலையில் மாணிக்கம்பாளையம் நாராயண வலசு மார்க்கத்தில் இருந்து ஈரோடு நோக்கி வரும் வாகனங்களும், சம்பத் நகர் கார்னரில் இருந்து நேராக, இடையன் காட்டு வலசு, அரசு மருத்துவமனை ரவுண்டானா, பேருந்து நிலையம், பன்னீர்செல்வம் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கும், வலது புறம் திரும்பி, கலெக்டர் அலுவலகம், பெருந்துறை ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வருகின்றன.

இந்த 3 சாலைகள் தவிர்த்து, சம்பத் நகர் கார்னரில் இருந்து அண்ணா தியேட்டர் வழியாக, பெரிய வலசு, வீரப்பன் சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் தவிர சத்தி ரோடு பகுதிக்கும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், இந்த 4 சாலைகள் இணையும் சம்பத் நகர் கார்னரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சம்பத் நகரில் இருந்து வந்து, அண்ணா தியேட்டர் செல்லும் சாலையிலும், அதன் எதிர் திசையில், அண்ணா தியேட்டரில் இருந்து சம்பத்து நகர் வந்து, இடையன்காட்டு வலசு மற்றும் கலெக்டர் அலுவலகம், நசியனூர் ரோடு மார்க்கமாக செல்லும் வாகனங்களும் வருவதால் சம்பத் நகர் கார்னரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலை, மாலையில் பள்ளி மற்றும் அலுவலக நேரமான ‘பீக் ஹவர்ஸ்’ல் அனைத்து சாலைகளிலும் இருந்து வரும் வாகனங்களால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், இப்பகுதியில் ஹோட்டல், கடைகள் என பல்வேறு வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருவதால் அப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

இந்தப் பகுதியில் ஏற்கனவே சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு காரணங்களால் அவை செயல்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றன. ஆனால், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சம்பத் நகர் பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக இடையன்காட்டு வலசில் இருந்து நசியனூர் சாலை மார்க்கமாக செல்பவர்களுக்கு அண்ணா தியேட்டர் பிரிவில் திரும்பும் வாகனங்களால் கடும் இடையூறும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தும் வகையில், இடையன்காட்டு வலசிலிருந்து சம்பத் நகர் கார்னருக்கு வரும் பகுதியிலும், அதேபோல நசியனூர் ரோட்டில் இருந்து ஈரோடு நோக்கி வரும் வாகனங்களை அண்ணா தியேட்டர் பிரிவு சாலைக்கு முன்பாகவும் சிக்னல்கள் அமைத்து வாகனங்களை தடுத்து நின்று செல்ல அனுமதிக்கலாம்.

அதேபோல, சம்பத் நகரில் இருந்து அண்ணா தியேட்டர் மற்றும் நசியனூர் சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்களையும் அண்ணா தியேட்டர் பிரிவில் இருந்து சம்பத் நகர் மார்க்கமாக நோக்கி வரும் வாகனங்களையும் அந்த பிரிவு ரோட்டிலேயே சிக்னல்கள் அமைத்து நின்று செல்லுமாறு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தலாம்.

அதேநேரம், அண்ணா தியேட்டர் பிரிவு மற்றும் நசியனூர் சாலை, இடையன் காட்டுவலசு வழியாக கனரக வாகனங்கள் இயக்கப்படுவதை தடுத்தும், சம்பத் நகர் கார்னரில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் தற்காலிக கடைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலமாகவும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் சம்பத் நகர்-நசியனூர் ரோடு இணைப்பு சாலையில் சிக்னல் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Sampath Nagar-Nasianur ,Erode ,Sampath Nagar – ,Nasianur ,Erode Collector's Office ,Sampath Nagar-Nasyanur ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் மது போதையில் ஓட்டி வரப்பட்ட...