- வ்ர்தலா
- ஒருங்கிணைந்த சேவை மைய
- கனகி நகர், சென்னை
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- எம்.
- விலுதா இன்டிகிரேட் சர்விஸ்
- சோஷிங்கநல்லூர் கன்னகநகர்
- முதல்வர்
- எம். யு.
- கண்ணகி நகர்
- ஸ்டாலின்
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகிநகரில் திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்குவது, அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகை மற்றும் பிற மாவட்டங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தனியாகவோ அல்லது துணையாளர் ஒருவருடனோ பயணம் செய்ய 75% பயண கட்டண சலுகை வழங்குவது என மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டத்தின் நோக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகல் தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவைகளை அவர்களின் தேவைகேற்ப இல்லங்களிலும், மறுவாழ்வு சேவைக்கென வடிவமைக்கப்பட்ட ஊர்திகளிலும், ஒருங்கிணைந்த சேவை மையங்களிலும் வழங்குவதாகும். அதன்படி, உரிமைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமைய பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மனம் தொடர்பான நாள்பட்ட மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்றும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப்பயிற்சி, இயன்முறை, செயல்முறை மற்றும் உளவியல் ஆகிய ஆறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுவதோடு, இச்சேவைகளை வழங்க வல்லுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மையம் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இம்மையத்தில் அமைந்துள்ள கழிப்பறைகளை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்படுமாயின், அங்கு வைக்கப்பட்டுள்ள பஸ்ஸரை பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் முழுமையாக தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட LoT தொழில் நுட்பம் முதல்முறையாக இந்தியாவிலேயே இம்மையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அவசர சூழ்நிலைகளை, தொலைவில் இருந்தாலும் உடனே கண்டறிந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட முடியும்.
தரமான கட்டிட வடிவமைப்பினை ஏற்படுத்தி ஒன்றிய அரசால் வரையறுக்கப்பட்ட இந்த மையம் ரூ.3.08 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு முன்னெடுப்பாக இம்மைய வளாகத்தில் ஒரு மாற்றுத்திறனாளியால் நடத்தப்படும் ஆவின் பாலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், பிரபாகரராஜா, கணபதி, மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் ரெ.தங்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சிஜி தாமஸ் வைத்யன், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் லக்ஷ்மி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் இரா.சுதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* மழலையர் கட்டிடத்தை பார்வையிட்டார் முதல்வர்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எழில் நகரில் பயன்படுத்தாமல் பழுதடைந்த நிலையில் இருந்த நடுநிலைப்பள்ளி ஒன்றை மாநகராட்சியின் அனுமதியுடன் அங்குள்ள மக்களுக்கு உதவி செய்யும் வகையில், அப்பள்ளி கட்டிடம் சென்னை மாநகராட்சியும், ஸ்ரீராமசரண் அறக்கட்டளையும் இணைந்து ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ், ரூ.69 லட்சம் செலவில் 5 வகுப்பறைகளுடன் மே 2024ல் சீரமைக்கப்பட்டது. மாண்டிசோரி வகுப்புகளுக்கான உபகரணங்களை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.
மாநகராட்சியின் உரிய அனுமதியுடன் மழலையர் வகுப்பு பிரிவு புதிய வளாகத்தில் உருவாக்கப்பட்டு, சென்னை நடுநிலைப்பள்ளியின் இணைப்பாக எழில் நகரில் ஆகஸ்டு 2024 முதல் செயல்பட துவங்கியுள்ளது. இப்பள்ளியில் தற்போது 35 மழலையர் இலவசமாக பயின்று வருகின்றனர். மேலும், இப்பள்ளியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். முதல்வர் நேற்று காலை இந்த மழலையர் பிரிவு கட்டிடத்தை பார்வையிட்டு, மழலையர் பிரிவு ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், ஆசிரியர்களுடன் முதல்வர் குழு புகைப்படம்எடுத்துக் கொண்டார்.
* குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர்
சென்னை கண்ணகி நகர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இரண்டு பக்கமும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வரும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் காரில் இருந்து இறங்கி சென்று, பொதுமக்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்களிடம் குழந்தைகளை வாங்கி முதல்வர் கொஞ்சி மகிழ்ந்தார். இது அங்கு கூடியிருந்தவர்களிடையே மிகவும் பரவசத்தை ஏற்படுத்தியது.
The post மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவை வழங்க ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம்: சென்னை கண்ணகி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.