×

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் மருத்துவர் உள்பட 10 பேர் படுகாயம்

*திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம் : திண்டிவனம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் நிகழ்ந்த விபத்தில் சென்னை நியூரோ மருத்துவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (42). இவர் சென்னையில் நியூரோ மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரி மாலா (45).

தனியார் பள்ளி ஆசிரியையான இவர் திண்டிவனம் மன்னர்சாமி கோயில் பகுதியில் வசித்து வருகிறார். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இளையராஜா சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஆட்சிப்பாக்கம் வந்தார். பின்னர் நேற்று மாலை அங்கு சுபநிகழ்ச்சி முடிந்த பின்னர் இளையராஜாவும், அவரது சகோதரி மாலாவும் இருசக்கர வாகனத்தில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

சலவாதி பகுதியை அடுத்துள்ள அட்டை கம்பெனி அருகே வந்தபோது, இருசச்கர வாகனத்தின் பின்னால் வந்த ஷேர் ஆட்டோவின் பின்புறம் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதியது. இதில் ஷேர் ஆட்டோ மூன்று குட்டிக் கரணங்கள் அடித்து முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனம் சாலையோரம் தூக்கி வீசப்பட்டது.

இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவில் பயணம் செய்த சாரம் சேகர் (61), நிஷார் (42) ஒலக்கூர் வேலுப்பிள்ளை (45), மேல்ஆதனூர் ஜக்குபாய் (70), செல்வி (33), கீழ்ஆதனூர் செல்வி (32), இவரது மகள் சத்யா (15) மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நியூரோ மருத்துவர் இளையராஜா, அவரது சகோதரி மாலா உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து வந்த ரோஷனை போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை-திருச்சி சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திண்டிவனம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் மருத்துவர் உள்பட 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Trichy highway Dindivanam ,Chennai ,Dindivanam ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் – திண்டிவனம் அருகே...