×

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக தி.நகரில் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக தி.நகர் பகுதியில் நாளை முதல் டிசம்பர் 1ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக, போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள், பனகல் பார்க் பகுதியில் நடைபெற்று வருகிறது. பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் அமைப்புக்கான கட்டுமான பணிகள் வெங்கட்நாராயணா சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் அருகில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் நாளை முதல் வரும் டிசம்பர் 1ம் தேதி வரை 7 நாட்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி, வாகனங்கள் தியாகராயா சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கட்நாராயணா சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் நேராக தியாகராயா சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக சென்று வெங்கட்நாராயணா சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.

உள்ளூர் மக்களின் வசதிக்காக, வாகனங்கள் தியாகராயா சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் வரை இரு திசைகளிலும் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக தி.நகரில் ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Metro Rail ,Chennai ,Thi ,Nagar ,Chennai Traffic Police ,Dinakaran ,
× RELATED பயணிகள் கவனத்திற்கு: சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சேவை சீரானது