×

சென்னையில் மழை பாதிப்புகளை தடுக்க அமைக்கப்பட்ட வெள்ள மேலாண்மைக்குழு இடைக்கால அறிக்கை தாக்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர்

சென்னை: சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க அமைக்கப்பட்ட சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக்குழு முதலமைச்சரிடம் இடைக்கால அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது. சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல், நகர்ப்புற திட்டமிடல், பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழுவை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழுவில், 14 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.  இதைத்தொடர்ந்து இந்த குழு சென்னையில் வெள்ளப் பாதிப்பை குறைப்பதற்கான ஆலோசனை மற்றும் திட்டங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் வெள்ள தடுப்பு குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் எத்தகைய பெருமழையையும் சீரிய வகையில் எதிர்கொள்ளும் வகையில் உடனே செயல்படுத்த வேண்டிய விரிவான திட்டங்களை உடனே அரசுக்கு வழங்க வேண்டும். சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உட்பட சென்னை வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நீண்டகாலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை வழங்க வேண்டும். நீர் மேலாண்மைக்கான சிறந்த செயல் திட்டத்தை பகுதி வாரியாகவும், துறை வாரியாகவும் வழங்க வேண்டும். சென்னையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியான திட்டமிடுதல் தேவைப்படுகிறது. எனவே, விரைவாக அறிக்கை அளித்தால் விரைவாக திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். எனவே, திட்ட அறிக்கையை விரைவாக துல்லியமாக, நடைமுறை சாத்தியம் உள்ள திட்டமாக தர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குழுவினரிடம் அறிவுறுத்தினார். அதன்படி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று மழை வெள்ளம் வெளியேறாமல் இருப்பதற்கான காரணம் என்ன, அவற்றை எப்படி சரி செய்யலாம். மேலும், எந்த மாதிரியான திட்டங்களை செயல்படுத்தினால் வரக்கூடிய காலங்களில் சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்கலாம் குறித்து இக்குழு ஆலோசனை மேற்கொண்டு திட்ட அறிக்கையாக தயார் செய்தது. இந்தநிலையில், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பது குறித்து முதல் கட்ட திட்ட அறிக்கையை சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக்குழு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. பின்னர், முதல்வர் தலைமையில் குழுவினர் உடன் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மழைவெள்ள பாதிப்புகளை தடுக்கவும், மழைநீர் வடிகால்களை தூர்வாரி அகலப்படுத்துவது குறித்தும் இக்குழு எடுத்துக்கூறியது. கூட்டத்தில், அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post சென்னையில் மழை பாதிப்புகளை தடுக்க அமைக்கப்பட்ட வெள்ள மேலாண்மைக்குழு இடைக்கால அறிக்கை தாக்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர் appeared first on Dinakaran.

Tags : Flood Management Commission ,Chennai ,Tamil Nadu ,Chief President BCE G.K. ,Stalin ,Chennai Metropolitan Flood Risk Management Authority ,Chief CM ,G.K. Stalin ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்