×

அமெரிக்க நீதித்துறை பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில் அதானி நிறுவனங்களிடம் ‘செபி’ விசாரணை: 2 வாரத்தில் பதிலளிக்க பிஎஸ்இ, என்எஸ்இ-க்கு நோட்டீஸ்

மும்பை: அதானிக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில், அந்த நிறுவனங்கள் குறித்து ‘செபி’ விசாரணை தொடங்கி உள்ளது. முதலீட்டாளர்களிடம் குற்றச்சாட்டுகளை மறைத்ததா? என்பது குறித்து 2 வாரத்தில் விசாரித்து பதிலளிக்க பிஎஸ்இ, என்எஸ்இ-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைகேடாக பெறப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2020ம் ஆண்டு முதல், இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகளை அதானி தனிப்பட்ட முறையில் சந்தித்து, ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதிகாரிகளுடன் சாகர் அதானி தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, கவுதம் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

அமெரிக்க நீதித்துறை, அமெரிக்க புலனாய்வு அமைப்பு, பங்குசந்தை ஆணையம் ஆகிய அமைப்புகளின் சமீபத்திய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களும், அதானி குழுமத்திற்குக் கடன் கொடுத்தவர்களும் புலம்பி வரும் வேளையில், நேற்று இந்திய பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, அதானி குழுமம் அனைத்து விதமான தகவல்களையும் பங்குச்சந்தைக்கு வெளிப்படுத்தியுள்ளதா? என்பதை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. செபி-யின் இந்த நடவடிக்கை சந்தை விதிமுறைகள் சரியாக பின்பற்றுகிறதா? என்பதை உறுதி செய்வதற்கான அதன் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் துவங்கியுள்ளதாகக் கூறியுள்ளது.
செபியின் உத்தரவின் பெயரில் பங்குச்சந்தைகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியப் பங்குச் சந்தைகள் பல்வேறு அதானி குழும நிறுவனங்களுக்கு முக்கியமான கேள்விகளைத் தொகுத்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குறிப்பாக அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள வழக்கில் குறிப்பிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விபரங்களை முறையாகப் பங்குச்சந்தைக்கு வெளிப்படுத்தியுள்ளதா? என்பதற்கான விளக்கத்தைக் கோரியுள்ளன. கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பங்குச்சந்தைக்குத் தகவல் வெளியிடுவதில் ஏதேனும் தாமதம் அல்லது தவறு இருந்ததா? என்பது குறித்து பங்குச்சந்தை ஆய்வு செய்ய உள்ளது.
கடந்த 20ம் தேதி அமெரிக்க நீதித்துறையின் வழக்கிற்குப் பின்பு செபி அமைப்பானது, அதானி குழுமத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதேவேளையில் அதானி குழுமத்தின் நிர்வாகிகள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக இதுவரையில் எந்த அதிகாரப்பூர்வ விசாரணையும் தொடங்கப்படவில்லை. தற்போதைய நடவடிக்கைகள் மூலம் அதானி குழுமம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நேர்மையாக இருப்பதை உறுதி செய்வதற்கான செபியின் வழக்கமான கண்காணிப்பு செயல்முறை தான் என்றும் கூறப்படுகிறது. அதானி குழுமம் தகவல்களைப் பங்குச்சந்தைக்குத் தெரிவிப்பதில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது அல்லது அதிகாரப்பூர்வ விசாரணைகளைத் தொடங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து செபி வட்டாரங்கள் கூறுகையில், ‘அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட லஞ்சப் புகார்கள் மீதான விசாரணையை முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க அதானியின் நிறுவனம் தவறிவிட்டதா? என்பதை செபி விசாரித்து வருகிறது. இந்திய பங்குச் சந்தைகளான பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவை, அடுத்த இரு வாரங்களுக்குள் இதுகுறித்த தகவல்களை அளிக்குமாறு செபி உத்தரவிட்டுள்ளது. அவர்களின் பதில் சரிபார்க்கப்பட்டு விசாரணை தொடங்கப்படும். கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சாகர் அதானியின் வீட்டிற்குச் சென்று சோதனை அறிவிப்பை வெளியிட்டு மின்னணு சாதனங்களைக் கைப்பற்றினர்’ என்றன.

இதற்கிடையே சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்யவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் எதிர்கட்சிகள் ஆளும் ஒன்றிய பாஜக கூட்டணி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. வரும் 25ம் தேதி நாடாளுமன்றம் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதானி விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post அமெரிக்க நீதித்துறை பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில் அதானி நிறுவனங்களிடம் ‘செபி’ விசாரணை: 2 வாரத்தில் பதிலளிக்க பிஎஸ்இ, என்எஸ்இ-க்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Sebi ,Adani ,US Department of Justice ,BSE ,NSE ,Mumbai ,PSE ,India ,US ,Dinakaran ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டு வழக்கு செபி தலைவர்...