- கார்த்திகை தீபத்திருவிழா
- விளக்கு
- திருத்தணி
- கார்த்திகா தீபா
- கார்த்திகை தீபா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அகல்
- கார்த்திகா தீபத்ரி திருவிழா
திருத்தணி: கார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் 13ல் கொண்டாடப்பட உள்ள நிலையில், திருத்தணி பகுதியில் களிமண் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்தீபத் திருவிழாவில் பெண்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி வைத்து கொண்டாடுவர். தீபம் ஏற்ற அதிகளவில் அகல் விளக்குகளே பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், தற்போது அகல் விளக்குகளின் தேவை அதிகரித்துள்ளது. பல்வேறு வகையான அச்சு விளக்குகள் விற்பனைக்கு வந்தாலும் களிமண் அகல் விளக்குகள் வாங்கி தீபம் ஏற்ற பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், களிமண் விளக்குகளுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, பள்ளிப்பட்டு ஒன்றியங்களில் உள்ள தெக்களூர், சூரியநகரம், சவட்டூர், குமாராஜ்பேட்டை, குமாரமங்கலம், பள்ளிப்பட்டு, கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, காப்பூர் கண்டிகை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டுளனர்.
1 முகம் 2 முகம் மற்றும் 5 முகம் கொண்ட அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிறிய அகல் விளக்குகள் 10 ரூபாய்க்கு 5 விளக்குகள், பெரிய அகல் விளக்குகள் 10 ரூபாய்க்கு 2 விளக்குகள் விற்பனை செய்யப்படுவதாக மண்பாண்ட தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.
* தமிழக முதலமைச்சருக்கு நன்றி
திருத்தணி அருகே, சூரியநகரம் கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி ஒருவர் கூறுகையில், களிமண் கை விளக்குகளை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக களிமண் எடுக்க அனுமதி இல்லாததால், மண்பாண்ட தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
தற்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக களிமண் எடுத்து பயன்படுத்த அனுமதி வழங்கியதால், குடும்பத்தில் அனைவரும் ஆர்வத்துடன் அகல் விளக்குகள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதன்மூலம் அனைவருக்கும் வேலை கிடைப்பதால், வருவாய் அதிகரித்து வருகிறது. இதனால், மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
The post கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிப்பு பணிகள் மும்முரம்: மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.