×
Saravana Stores

ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியது கன்னியாகுமரி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் இன்று காலை ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக பண்டிகை நாட்கள், வார விடுமுறையில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிகிறது.

இந்தநிலையில் வார விடுமுறை நாளான இன்று காலை முதலே கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் அதிகாலை சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் டிக்கெட் எடுத்துவிட்டு படகில் ஏறினர். விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று சுற்றிப்பார்த்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் கன்னியாகுமரி கடற்கரை களைகட்டியது.

தற்போது சபரிமலை சீசனையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தினசரி காலை கன்னியாகுமரியில் குவிந்து வருகின்றனர். அவர்கள் முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க கன்னியாகுமரியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 24 மணிநேரமும் திரிணேி சங்கமம் கடற்கரை, காந்தி, காமராஜர் மண்டபம் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

கொடைக்கானல்
‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிக்கவும், வார விடுமுறையை கொண்டாடவும் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர். குறிப்பாக கேரள மாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. மோயர் பாயின்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, பில்லர் ராக், கோக்கர்ஸ் வாக் என அனைத்து இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் குவிந்து இயற்கை பசுமை கொஞ்சும் காட்சிகளையும், மலைமுகடுகளுடன் மோதி விளையாடும் வெண் பஞ்சு மேக கூட்டங்களையும் கண்டு ரசித்தனர்.

இதுதவிர நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும், பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்தும் மகிழ்ந்தனர்.
மேலும், கொடைக்கானலில் தற்போது காலை 9 மணி வரையும், மாலை 5 மணிக்கு மேலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகலில் இதம் தரும் வெயில், வெயில் இறங்கியதும் பனி என நிலவும் கிளைமேட்டை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர். இன்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.

The post ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியது கன்னியாகுமரி appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Ayyappa ,Kanniyakumari ,Tamil Nadu ,
× RELATED கன்னியாகுமரியில் கடைகளை அகற்றியதால் அரசு விருந்தினர் மாளிகை முற்றுகை