- இந்து மதம் மகளிர் அறக்கட்டளை துறை
- திருச்செந்தூர் கோயில்
- திருப்பதி
- திருச்செந்தூர்
- திருச்சீரலைவாய்
- முருகன்
- திருச்செந்தூர்
- இந்து சமய அறநெறிகள் துறை
உலகெங்கிலும் தனித்துவமாக வாழும் தமிழினத்தின் ஒரே கடவுளாக போற்றப்படும் முருகனின் அவதார நோக்கம் நிறைவேறிய தலம் திருச்சீரலைவாய் எனும் பெயர் கொண்ட திருச்செந்தூர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு என்றழைக்கப்பட்டாலும் அவதாரம் நிறைவேறிய தலையாய படை வீடாக உள்ளது திருச்செந்தூர். கடற்கரையோரம் இருந்தாலும் கடலரிப்பு மற்றும் இயற்கை சீற்றங்களை தடுக்கும் வகையில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட கற்கோயில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இங்கு ஆண்டுதோறும் அவதார ஸ்தல புராணத் திருவிழாவாக ஐப்பசியில் 6 நாள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். அதேபோல வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆவணித்திருவிழா, மாசிப்பெருந்திருவிழா ஆகியன திரளானோர் பங்கேற்கும் திருவிழாக்களாக உள்ளது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பு திருச்செந்தூரில் கூட்டம் உள்ளதா? எத்தனை மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்திடலாம்? என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்த பிறகே வரத் திட்டமிடுகின்றனர்.
அவ்வாறு திட்டமிட்டு வந்தும் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லையே? வரிசையில் காத்திருக்கும் போது நெரிசலில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்குமே மூச்சு திணறல் ஏற்படுகிறதே? என ஆதங்கப்படுகின்றனர். அரசாங்கம் இதை சரி செய்யாதா? எனக் கேட்டவர்களின் குரலுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. பக்தர்களின் ஏக்கத்திற்கு தீர்வு காணும் வகையில் 2022ல் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி செலவில் பக்தர்களுக்கான பல்வேறு கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெருந்திட்ட வளாக பணிகளை கடந்த 28.09.2022ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதில், ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பில் 2 லட்சத்து 70 ஆயிரம் சதுர அடியில் பணிகள் மூன்று நிலைகளாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக திருப்பணிகள், சுகாதார வளாகம் (2), நீரேற்றும் நிலையம், நிர்வாக கட்டிடம் (2), மின் நிலையம், காத்திருக்கும் மண்டபம், வரிசைப்பாதை, உயர்மட்ட பாலம், முடி காணிக்கை செலுத்தும் மண்டபம், நாழிக்கிணறு நவீன மயமாக்கல், கடற்கரையில் சூரசம்ஹாரம் பார்ப்பதற்கு அரங்கம், ஐந்து படை வீடு முருகன் சந்நிதி, திருமண மண்டபம், வாகனம் நிறுத்தம் அமைக்கப்படவுள்ளது. கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வசதி, 600 பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் அன்னதான கூடம், வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது.
பக்தர்கள் வசதிக்காக தரைத்தளத்தில் மூன்றும், முதல் தளத்தில் ஒன்றும் என 4 காத்திருக்கும் அறைகள் கட்டப்பட்டு ஒரே நேரத்தில் 2400 பக்தர்கள் அமரும் வசதி செய்யப்படவுள்ளது. ஒரே நேரத்தில் 256 பேர் முடிகாணிக்கை செலுத்தும் வகையில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கிரிப்பிரகாரத்தில் தேர் உலாவுக்கும், பக்தர்கள் வள்ளி குகைக் கோயிலுக்கும் எந்த இடையூறும் இன்றி செல்வதற்கு வசதி செய்யப்படுகிறது. முதற்கட்டமாக முடி காணிக்கை மண்டபம், சுகாதார வளாகங்கள், நீர்த்தேக்கத் தொட்டி, நீரேற்று நிலையம் ஆகிய 4 முடிவுற்ற பணிகளை காணொலி காட்சி வாயிலாக கடந்த மாதம் 14ம் தேதி முதல்வர் திறந்து வைத்தார். இதேபோல திருக்கோயில் சார்பில் பக்தர்கள் குடும்பத்துடன் தங்குவதற்கு குடில்கள், நவீன சலவை கட்டிடம், வணிக வளாகம், சஷ்டி மண்டபம், பஞ்சாமிர்தம் மற்றும் பசுஞ்சாண விபூதி தயாரிக்கும் இடம், கலையரங்கம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்தியாவில் அதிகளவில் பக்தர்கள் தரிசனம் செய்திடும் போதும் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் கொண்டதாக திருப்பதி கோயிலே விளங்குகிறது. மலைக்கு மேல் உள்ள கோயில் என்றாலும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளைப் போலவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் பக்தர்கள் காத்திருக்கும் அறை, நேரடி மற்றும் இணைய முன்பதிவு, நாள் முழுவதும் அன்னதானம், காத்திருக்கும் பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழித்திட வசதி போன்றவைகளும், சுவாமி உற்சவங்களை பக்தர்கள் எளிதில் காண்பது போன்ற வசதிகளை குறி வைத்து தான் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடந்தது என்பதை பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் போது அனைவரும் பாராட்டுவார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 2.7.2009 அன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் தற்போது 15 ஆண்டுகள் கடந்துள்ளதால் அடுத்த ஆண்டு (2025) ஜூலை 7ம்தேதி நடைபெறும் என அறநிலையத்துறை அறிவித்து அதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியில் நடைபெறும் பணியில் தற்போது வரை 60 சதவீதத்திற்கு மேலாகவும், திருக்கோயில் நிதியில் ரூ.100 கோடியில் நடைபெறும் பணியில் தற்போது வரை 25 சதவீதத்துக்கும் மேலான பணிகளும் நிறைவடைந்துள்ளது. இரவு, பகலாக நடக்கின்ற பெருந்திட்ட வளாகப் பணிகள் வருகிற 2025 நவம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக கோயிலில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.19.80 கோடியில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் தமிழக மீன்வளத்துறையினரால் வேகமாக நடந்து வருகிறது.
* பக்தர்கள் தங்க யாத்ரி நிவாஸ்
கடந்த 2018ல் அப்போதைய தமிழக அரசு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பக்தர்கள் தங்குவதற்காக ரூ.33 கோடியில் யாத்ரி நிவாஸ் விடுதிகள் கட்டப்படுமென அறிவித்தது. 2019க்குள் கோயில் தெற்கு மற்றும் வடக்கு டோல்கேட் அருகில் தங்கும் விடுதிகள் கட்டி திறக்கப்படும் என்றும் தெரிவித்தது. ஆனால் ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள், 2020ல்தான் தொடங்கப்பட்டது. 2021ல் திமுக அரசு பொறுப்பேற்றதும் முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் நேரடி பார்வையில் யாத்ரி நிவாஸ் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இதற்காக கடந்தாண்டு கூடுதலாக ரூ.19 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் வேகமாக நடந்துள்ளது. திருச்செந்தூர் கோயிலில் 2 பகுதிகளாக கட்டப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதிகளில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 50 வீதம் அலமாரிகள், மரக்கட்டில்கள், கழிப்பறையுடன் கூடிய இரு படுக்கை கொண்ட 100 அறைகள், 10 மற்றும் 6 படுக்கை கொண்ட 28 டார்மென்டரி ஹால்கள் (பெரிய அளவிலான தங்குமிடம்) மற்றும் 20 குடில்களும் கட்டப்பட்டு உள்ளது. பக்தர்களுக்காக உணவகம், ஜெனரேட்டர் மற்றும் மூத்த குடிமக்கள் வசதிக்காக லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. யாத்ரி நிவாஸ் விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கலாம். ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் இந்த யாத்ரி நிவாஸ் அமைக்கப்பட்டுள்ளது.
* பழமை மாறாமல் புனரமைப்பு
தொன்மையான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் எந்த ஒரு கோயிலிலும் நடைபெறாத வகையில் ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப்பணிகள் பழமை மாறாமல் ராஜகோபுரம் மற்றும் கல் மண்டபங்கள், திருப்பணி மண்டபங்கள் ஆகியவை புதுப்பிக்கப்படுகிறது. இத்திட்டம் எல்லா வகையிலும் ஆகம விதிப்படி தான் நடக்கிறது. இதனை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மற்றும் ஆணையர்கள் ஆகியோர் அடிக்கடி நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர்.
The post இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதன்முறையாக ரூ.300 கோடியில் மேம்படுத்தப்படும் திருச்செந்தூர் கோயில்: 2025ல் திருப்பதி போல கட்டமைப்பு மாறும் appeared first on Dinakaran.