×

சிறப்புக் குழந்தைகளுக்கான பேச்சுப் பயிற்சி!

நன்றி குங்குமம் டாக்டர்

மன வளர்ச்சிகுன்றிய நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும், ஆட்டிசம் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் பேச்சு பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்களை பேச வைக்கும் பணியை செவ்வென செய்து வருகிறார் பேச்சு பயிற்சியாளர் எஸ்.தனசேகரன். இவர், குழந்தைகள் மன வளர்ச்சி குன்றி பிறக்கும் காரணத்தையும், அவர்களுக்கு அளிக்கப்படும் பேச்சு பயிற்சி குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

மன வளர்ச்சி குன்றிய நிலை என்பது என்ன?

மன வளர்ச்சி குன்றிய நிலை என்பது அறிவு திறன் குறைபாடாகும். இவர்கள், ஒரு செயலை சரியாக செய்யாமல் மாறுபட்டு செய்வார்கள். உதாரணமாக, ஒரு வயதில் ஒரு குழந்தை குறைந்தபட்சம் மூன்று வார்த்தையாவது பேச வேண்டும் என்பது விதி. ஆனால், அறிவுத் திறன் குறையுடைய குழந்தைகள் பேச மாட்டார்கள். ஆறுமாதத்தில், குழந்தைகள் ஒருவிதமான ஒலிகளை எழுப்புவார்கள். ஆனால், இந்த குழந்தைகள் அதனை செய்ய மாட்டார்கள்.

இதுபோன்று சில காரணங்களே மன வளர்ச்சி குன்றிய நிலையாகும். குறிப்பாக, மூளையில் எண்ணில் அடங்காத மில்லியன் கணக்கான நியூரான்கள் இருக்கும். இந்த நியூரான்களில் சில சின்ன சின்ன நியூரான்கள் மயங்கிய நிலையிலும், தூங்கிய நிலையிலும் இருப்பது அறிவுசார் குறைபாடு ஏற்பட முக்கிய காரணமாகும். இதற்கான முற்று காரணம் இதுவரை கண்டறியவில்லை. ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள்

ஒரு பெண் கர்ப்பமுற்றிருக்கும்போது, கணவராலோ, கணவரின் குடும்பத்தாராலோ அல்லது வேறு ஏதோ காரணங்களாலோ மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டால், அவருக்கு பிறக்கும் குழந்தை மன வளர்ச்சி குன்றி பிறக்கும். அல்லது ஆட்டிசம் பாதிப்புடன் பிறக்கிறது. ஆட்டிசம் குழந்தைகளை மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்று சொல்லாமல், புற உலக சிந்தனையாளர்கள் என்று சொல்லப்படுகிறது.

இது தவிர, கருவுற்று இருக்கும் தாய், அதிகளவில் ஜங்க் ஃபுட் (கேக், பர்கர், பீட்சா) சாப்பிடுவது, வண்ண நிறங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவு பொருள்களை அதிகம் உண்பதும் கருவறையை தாக்கப்பட்டு, குழந்தைக்கு இந்த பாதிப்புகள் உண்டாக்குகிறது.மூன்றாவதாக, சிலர், குழந்தை குண்டாக பிறக்க வேண்டும், நல்ல நிறமாக பிறக்க வேண்டும். சத்துள்ளதாக பிறக்க வேண்டும் என்று மருத்துவர் ஆலோசனையில்லாமல் கண்ட மருந்து மாத்திரைகளை உட்கொண்டு இருப்பார்கள். அந்தநிலையில் குழந்தை பாதிக்கப்பட்டு இப்படி பிறக்கிறார்கள்.

அதுபோன்று, இன்றைய நவீன காலச்சூழலில் சில பெண்களுக்கு மது பழக்கம், புகைப்பழக்கம் போன்றவை இருக்கிறது. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் மன வளர்ச்சி குன்றி பிறக்கலாம்.  அதுபோன்று, சிலருக்கு நெருங்கிய சொந்த உறவுமுறையில் திருமணம் செய்வதனாலும் 5 சதவீதம் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்கின்றனர்.

ஒரு தாய் கருவுற்றிருக்கும் நிலையில் அவர் வாழும் சுற்றுசூழல் மாசு காரணமாகவும், சில குழந்தைகள் மன வளர்ச்சி குன்றி பிறக்கின்றனர். அதுபோன்று, இன்றைய காலசூழலில், நல்ல நேரத்தில்தான் குழந்தை பிறக்க வேண்டும், சிலர் நேரம் காலம் எல்லாம் பார்த்து அந்த நேரத்திற்குள் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துவிட வேண்டும் என்று மருத்துவர்களை அவசரப்படுத்துகிறார்கள். இதுபோன்ற நிலையில், சில மருத்துவரின் அசாதாரண தன்மையால் குழந்தையின் தலையில் ஏதாவது, அடிபட்டு சில குழந்தைகள் மனவளர்ச்சி குன்றி பிறக்கின்றனர்.

சில குழந்தைகள் வேக்கம்(Vaccum) மெஷின் வைத்து உறிஞ்சி எடுக்கப்படும்போது சரியானமுறையில் எடுக்கவில்லை என்றாலும், அந்தக் குழந்தை பாதிக்கப்பட்டு மன வளர்ச்சி குன்றி பிறக்கிறது.

மன வளர்ச்சி குன்றி பிறக்கும் குழந்தையை கண்டறிவது எப்படி?

பொதுவாக, ஒரு குழந்தைக்கு மன வளர்ச்சி குன்றியிருக்கிறது என்பதை 2-3 வயதில்தான் முழுமையாக கண்டறிய முடியும். அதாவது, அந்த குழந்தையின் பார்வை, பேச்சு, உடல் இயக்கங்கள், சிந்திக்கும் திறன் போன்றவை சராசரி குழந்தையில் இருந்து மாறுபட்டு காணப்பட்டால், மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

இதற்கு முன்பு அறிய வேண்டும் என்றால், ஒரு குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் அதற்கு தலை நின்றுவிடும். அப்படி நிற்கவில்லை என்றால், நாம் உடனே சந்தேகப் பட வேண்டும். அது போன்று அந்தந்த பருவத்தில் குழந்தை செய்ய வேண்டிய செயல்கள், உதாரணமாக, தவழ்வதிலிருந்து குழந்தை அடியெடுத்து வைப்பது வரை உரிய பருவத்தில் செய்யவில்லை என்றால் சந்தேகப்பட வேண்டும்.

அதுபோன்று குழந்தையின் அனைத்து செயலிலும் தாமதம் இருந்தால் அதன் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிந்து கொள்ள வேண்டும். அதுபோன்று குழந்தையின் பார்க்கும் திறன், கேட்கும் திறன், செயல்திறன் இவற்றில் மாற்றம் தெரிந்தாலும் சந்தேகம் வர வேண்டும்.

மன வளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் உணவுமுறைகள்

பொதுவாக மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு மூளையின் செயல்திறன் குறைந்து காணப்படும். எனவே மூளையின் வளர்ச்சியை தூண்டக்கூடிய ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும்.

உதாரணமாக, ஆரஞ்சு பழம், பப்பாளி, பால், ஆப்பிள், பாதாம், காலிஃப்ளவர், நாட்டுக் கோழி முட்டை இவற்றில் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. இவற்றை தொடர்ந்து கொடுத்து வரும்போது மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.

பேச்சு பயிற்சி என்பது என்ன?

பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதிலும் உள்ளவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தினால் பேச்சில் ஏற்படும் தடைகளை சரி செய்து மீண்டும் பேச வைப்பதே பேச்சு பயிற்சியாகும். உதாரணமாக, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் அல்லது ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பேச்சில் தடை இருக்கும். அவர்களுக்கு பயிற்சி அளித்து பேச வைப்பது. பெரியவர்களில் விபத்து காரணமாக, அறுவைசிகிச்சையின் காரணமாக அல்லது பக்கவாதம் ஏற்பட்டு அதனால் பேச முடியாமல் போவது போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு பேச்சு பயிற்சி அளிப்பது.

அதுபோன்று சில ஆண்கள் பெண் குரலிலும், சில பெண்கள் ஆண் குரலிலும் பேசுவார்கள். சிலர் கீச்சு குரலில் பேசுவார்கள் அவர்களுக்கு பயிற்சியளித்து குரலை சரிசெய்வது. சிலர் திக்கி திக்கி பேசுவார்கள். அவர்களுக்கு பயிற்சி அளித்து சரளமாக பேச வைப்பது போன்றவையே பேச்சு பயிற்சியாகும்.

பொதுவாக பூ நாக்கு, தட்டை நாக்கு, ஊசி நாக்கு என்று மூன்று வகையாக பிரிக்கலாம். இதுபோன்ற மூன்று நாக்கு உள்ளவர்களுக்கு பேச்சில் தடை வரலாம். அவர்களுக்கும் பேச்சுப் பயிற்சி தேவைப்படும்.

பேச்சுப் பயிற்சியின் வகைகள்?

டெஸ்ட் தெரபி- இனிப்பு, காரம், புளிப்பு போன்ற அறுசுவைகளால் அளிக்கப்படும் சிகிச்சை. உதாரணமாக ஒரு சுவையை குழந்தையின் நாக்கின் மையப் பகுதியில் வைக்கும்போது அது உஷ், ஆஸ், ஆ போன்ற ஒலிகளை எழுப்பும். இதன் மூலம் சிகிச்சை அளித்து பேச வைக்க முயற்சிப்போம்.

மசாஜ் தெரபி – உதடு, பல், நாக்கு, மேல் அன்னம், நெஞ்சுக்குழி இந்தப் பகுதியில் விரல்களை வைத்து பேச்சுக்கு தகுந்தவாறு அசைவை ஏற்படுத்துவது) வெர்பல், (Verbal) நான் வெர்பல் – (Non Verbal) இதில் சில குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சம் பேசுவார்கள். கொஞ்ச கொஞ்சம் சத்தம் விடுவார்கள். அவர்களுக்கு பயிற்சி மூலம் ஓர் எழுத்து வார்த்தை, ஈறு எழுத்து வார்த்தை, மூன்று எழுத்து வார்த்தை, வாக்கியம் என்று அவர்களுக்கு தொடர்ச்சியாக பேசும் பயிற்சி அளிப்போம்.

விஷன் தெரபி- புத்தகங்கள் வடிவில் படங்கள். பின்னர், ஒளி வடிவில் படங்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை. அதனை கண்கள் வழியாக அந்தக் குழந்தை உள்வாங்கிக் கொள்ளும்.

ஆடியோ தெரபி – பறவைகள், விலங்குகள், இயற்கை ஒலிகள், வாகனங்களின் ஓலி மூலம் அளிக்கப்படும் சிகிச்சை.

இசை தெரபி- கீரவாணி, அம்சவர்தினி, சிந்தி பைரவி ஆகிய மூன்று ராகங்களின் இசையை ஆடியோ மூலம் குழந்தைகளின் காதுக்குள் புகுத்தும்போது, அதன் பேச்சுத் திறன் அதிகரிக்கிறது.

வெஜிடாக்டிவ் தெரபி (Vegeta tive skill) ஊதல், உறிதல், மெல்லுதல், சப்பி சாப்பிடுதல் ஆகிய முறையில் அளிக்கப்படும் பயிற்சியாகும். உதாரணமாக, ஊதல் என்று எடுக்கும்போது புல்லாங்குழல், நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளை வாசிக்க செய்து குரலை வெளிக் கொண்டு வருவது. உறிதல் என்பது ஸ்டிரா மூலம் உறிய செய்யும் பயிற்சி, மெல்லுதலில் கேரட் போன்ற கடினமான காய்கறியை கடவா பல்லின் மத்தியில் வைத்து மெல்ல சொல்லுதல் இதன் மூலம் வெளிவரும் ஒலியை வைத்து சிகிச்சை அளிப்போம். சப்பி சாப்பிடுதல் தேனை வைத்து சுவை அறும்புகளை தூண்டுவது. அதுபோன்று வால்மிளகை குழந்தையின் வாயில் வைத்தால் அந்த காரத்திற்கு அவை சில ஒலியை எழுப்பும். அதன்மூலம் சிகிச்சை அளிப்பது.

சிகிச்சை முறைகள்

கண், காது, மூக்கு, வாய், மெய் இந்த ஐம்புலன்களில் முக்கியமான உறுப்பு வாய். மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டால், அதற்கு துணை சிகிச்சை அளிக்க முடியும். உதாரணமாக, காது பாதிக்கப்பட்டால், காது மெஷின் போட்டுக் கொள்ளலாம், கண் பாதிக்கப்பட்டால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம், கை கால் பாதிக்கப்பட்டால் அதற்கான கருவிகளை பயன்படுத்தலாம்.

ஆனால், வாய் பாதிக்கப்பட்டால் அதற்கு பொருத்தக்கூடிய கருவிகள் ஏதுமில்லை. அதனால், பயிற்சிகள் மட்டுமே அதற்கு உரிய சிகிச்சையாகும். அதுபோன்று மல்லிகை மலர் போன்ற நல்ல நறுமணங்களின் நுகர்தல் மூலம் சிகிச்சை அளிக்கிறோம். ஒலியின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை இவையெல்லாம் நவீன சிகிச்சையில் சிறந்துள்ளது.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்

The post சிறப்புக் குழந்தைகளுக்கான பேச்சுப் பயிற்சி! appeared first on Dinakaran.

Tags : Saffron ,S. Dhanasekaran ,Dinakaran ,
× RELATED குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு… தடுக்கும் வழிகள் என்ன?