×

மணலி மண்டலத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் சீரமைப்பு

திருவொற்றியூர்: மணலி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மாநகர பேருந்து, கன்டெய்னர் லாரி, குடிநீர், ஆம்புலன்ஸ், கார், ஆட்டோ என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலைகள் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வந்தது. எனவே, இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சென்னை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்த செய்தி கடந்த 19ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. அதன்பேரில், சென்னை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி குழுவினர் நேற்று முன்தினம் இந்த மணலி மண்டல பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து பழுதான சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க திட்டமிடப்பட்டு இதற்கான பணிகள் நேற்று நடந்தது. மணலி சிபிசிஎல் சந்திப்பிலிருந்து டிபிபி சாலை, ஆண்டார் குப்பம்-செங்குன்றம் சாலை, காமராஜ் சாலை போன்ற இடங்களில் பேட்ச் ஒர்க் மூலம் தார் சாலை மற்றும் கான்கிரீட் சாலைகளை அமைத்தனர்.

மேலும் மிக மோசமாக பழுதடைந்திருந்த சடையங்குப்பம் – டிபிபி இணைப்பு சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சாலைகளை சமன்படுத்தி அங்கு பேட்ச் ஒர்க் தார்சாலை போடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.  நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் தற்காலிகமாக பழுதான சாலைகளை சீரமைத்துள்ளோம். மழைக்காலம் முடிந்ததும் மேற்கண்ட அனைத்து சாலைகளும் தரமான அமைக்கப்படும்,’’ என்றனர்.

The post மணலி மண்டலத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Manali Mandal ,Tiruvottiyur ,Manali ,
× RELATED மணலி மாசிலாமணி நகரில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றம்