×

சுடுகாட்டிற்கு பாதை ஏற்படுத்தி தந்த அதிகாரிகள் விஸ்வந்தாங்கல் ஊராட்சியில்

தண்டராம்பட்டு, நவ.22: தண்டராம்பட்டு அடுத்த விஸ்வந்தாங்கல் ஊராட்சியில் சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதியை அதிகாரிகள் நேற்று ஏற்படுத்தி கொடுத்தனர். தண்டராம்பட்டு அடுத்த விஸ்வந்தாங்கல் ஊராட்சியில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தனித்தனியாக சுடுகாடு உள்ளது. இங்கு ஒரு சமூகத்தை சேர்ந்த 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் யாரேனும் இறந்தால் காலங்காலமாக அங்குள்ள விவசாய நிலம் வழியாக சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லக்கூடிய வழியில் விவசாயிகள் சிலர் பயிர் வைத்துள்ளதால், அவ்வழியாக வாகனத்தில் செல்ல முடியாது, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் நீலா ராஜேந்திரனிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் தாசில்தார் துரைராஜ், டிஎஸ்பி முருகன், மண்டல துணை தாசில்தார் மணவாளன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று, சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் பயிர் வைத்துள்ள விவசாயிகளிடம் பேச்சுவர்த்தை நடத்தினர். பின்னர், சார் ஆய்வாளர் ராஜ்குமார், சர்வேயர் பிரவீன் ஆகியோர் அளவீடு செய்து சுடுகாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சீர்படுத்தி பாதை அமைத்து கொடுத்தனர். பின்னர், அவ்வழியாக சடலத்தை எடுத்து சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

The post சுடுகாட்டிற்கு பாதை ஏற்படுத்தி தந்த அதிகாரிகள் விஸ்வந்தாங்கல் ஊராட்சியில் appeared first on Dinakaran.

Tags : Viswanthankal panchayat ,Thandarampatu ,Sudughat ,Visvanthangal panchayat ,Thandaramptu ,Dinakaran ,
× RELATED வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...