×

மணிப்பூரில் மக்களிடையே அமைதி திரும்ப தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அரசுக்கு உதவ வேண்டும்: வழியனுப்பு விழாவில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேச்சு

சென்னை: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தனது திறமைகள் மூலம் மாநிலத்தில் அமைதி திரும்ப அரசுக்கு உதவ வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேசினார். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாருக்கு வழியனுப்பு விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ெஜனரல் ஜெ.ரவீந்திரன், மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் பாஸ்கர், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி என்.எஸ்.ரேவதி, லா அசோசியேஷன் தலைவர் செல்வராஜ் மற்றும் நீதிபதியின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் நிகழ்த்திய வழியனுப்பு உரையில், அழகான மாநிலமான மணிப்பூரில் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தனது ராஜாங்க திறமைகளை கொண்டு அந்த மாநிலத்தில் அமைதி திரும்ப அரசுக்கு உதவ வேண்டும் என்றார். நீதிபதி டி.கிருஷ்ணகுமார் உடன் நெருக்கமான பந்தத்தை கொண்டுள்ளதால் மரபை மீறி அவருக்கு வாழ்த்து கூறுவதாக குறிப்பிட்டு பேசிய தலைமை நீதிபதி கே.ஆர்.ராம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த 8 ஆண்டு காலத்தில் 28,248 பிரதான வழக்குகளை முடித்து வைத்துள்ளார். கடின உழைப்பு, நேர்மை, உண்மை ஆகிய பண்புகளின் மூலம் தந்தையின் விருப்பத்தை பூர்த்தி செய்து தலைமை நீதிபதியாகி இருக்கிறார் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய நீதிபதி கிருஷ்ணகுமார், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் புதிய அத்தியாயம் சவால் நிறைந்தது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீதித்துறையை மேம்படுத்த வேண்டும். நீதி கிடைக்காமல் எந்த குடிமகனும் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். மாவட்ட நீதித்துறையில் 72 சதவீத நீதிபதிகள் பலத்தைக் கொண்டு 101 சதவீத வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது பெருமைப்பட வைத்துள்ளது என்றார்.

 

The post மணிப்பூரில் மக்களிடையே அமைதி திரும்ப தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அரசுக்கு உதவ வேண்டும்: வழியனுப்பு விழாவில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Krishnakumar ,Manipur ,Advocate General ,PS Raman ,CHENNAI ,Justice ,D. Krishnakumar ,Chief Justice of ,Manipur High Court ,Advocate ,General ,Dinakaran ,
× RELATED உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை...