×

அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சியை பிடிக்க முடியாது கட்சி ஆரம்பித்ததுமே சிலர் முதல்வர் கனவு காண்கின்றனர்: நடிகர் விஜய் மீது திருமாவளவன் பாய்ச்சல்

பழநி: ‘அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சியை கைப்பற்றி விட முடியாது. சிலர் கட்சி ஆரம்பித்ததுமே முதல்வர் கனவு காண்கின்றனர்’ என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக திருமாவளவன் தாக்கி பேசி உள்ளார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, திண்டுக்கல் மாவட்டம், பழநிக்கு நேற்று வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பழநி கோயிலுக்கு சென்றார். வின்ச் மூலம் மலைக்கோயில் சென்றவர் விளாபூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து படிப்பாதை வழியாக நடந்து அடிவாரம் வந்தார். வடக்கு கிரிவீதியில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமம் சென்றவர், அங்குள்ள தொட்டிச்சி அம்மனை வழிபாடு செய்தார். போகர் பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகளுடன் ஆசிரமத்தை பார்வையிட்டார். தொடர்ந்து சாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் கூறியதாவது: ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெட்டப்பட்டது, பள்ளி ஆசிரியை படுகொலை சம்பவங்கள் எதிர்பாராத நிகழ்வு. இச்சம்பவங்கள் வருத்தமளிக்கிறது. இந்நிகழ்வு கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதனை தடுக்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி எந்த ஆதாரத்தின் அடிப்படையில் புகார் கூறினார் எனத் தெரியவில்லை. அவரது புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் தொடர்பான விசிக துணைச் செயலாளரின் பேச்சு அவரது சொந்த விருப்பம். ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மீது நம்பிக்கை ஏற்பட்டு, செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மக்கள் அங்கீகாரம் கொடுக்கும்போது அது நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து நடந்த திருமண மண்டப திறப்பு விழாவில் திருமாவளவன் பேசியதாவது: 20 வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் எனக்கு முதலமைச்சர் கனவு உண்டு என்று கூறினேன். அப்படியென்றால், நான் முதல்வராக உட்காருவேன் என்று அர்த்தமல்ல. எளிய மக்களும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று பொருள். இன்று முதல் புள்ளி வைத்துள்ளோம். கோலம் போடுவதற்கு நிறைய புள்ளிகள் தேவை. நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைத்தால்தான் பெரிய கோலம் போட முடியும். அதுபோல் அடியெடுத்து வைத்தவுடனும் ஆட்சியை கைப்பற்றி விட முடியாது. இப்போது சிலர் கட்சி ஆரம்பித்த உடனே முதலமைச்சர் கனவோடு இருக்கிறார்கள். இன்னும் சிலர் கட்சி தொடங்காமலேயே ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சியை கைப்பற்றி விட முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வாழ்வா? சாவா? என்று கே.பி.முனுசாமி கூறியதை ஏற்கிறேன். பாஜவுடன் பயணம் செய்வதைதான் அதிமுக விரும்புகிறது. இவ்வாறு அவர் பேசினார். நடிகர் விஜய்யை மறைமுகமாக திருமாவளவன் தாக்கி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சியை பிடிக்க முடியாது கட்சி ஆரம்பித்ததுமே சிலர் முதல்வர் கனவு காண்கின்றனர்: நடிகர் விஜய் மீது திருமாவளவன் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : minister ,Thirumavalavan ,Vijay ,Palani ,Freedom Leopards Party ,
× RELATED புத்தக விழாவில் பங்கேற்காமல் இருக்க...