×
Saravana Stores

பாகன் உள்பட இருவரை கொன்ற திருச்செந்தூர் கோயில் யானை முகாமிற்கு செல்கிறதா?: அறநிலையத்துறை தீவிர ஆலோசனை

திருச்செந்தூர்: பாகன் உள்பட இருவரை தாக்கி கொன்ற திருச்செந்தூர் கோயில் யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். யானையை முகாமுக்கு அனுப்பலாமா? என திருக்கோயில் நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெண் யானை தெய்வானை, கடந்த 18ம் தேதி பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரை தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து கோயில் கண்காணிப்பாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரில் திருக்கோயில் போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாகனை கொன்ற யானையை அதன் குடிலில் வைத்து கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் செல்வக்குமார், மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன், பேராசிரியர் முத்துகிருஷ்ணன் மாவட்ட வனச்சரக அலுவலர் ரேவதிரமன், திருச்செந்தூர் கோட்ட வனச்சரக அலுவலர் கவின், திருச்செந்தூர் கால்நடை மருத்துவர்கள் பொன்ராஜ், அருண் உள்ளிட்டோர் தொடர்ந்து ஷிப்ட் முறையில் கண்காணித்து வருகின்றனர். இந்த கண்காணிப்பு, நாளை (22ம் தேதி) வரை இருக்குமென தெரிகிறது. அதன் பிறகு யானையின் நடவடிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது. அதன் அடிப்படையில் யானையை வழக்கமான கோயில் பணிக்கு பயன்படுத்துவதா? அல்லது புத்துணர்ச்சிக்காக முகாமுக்கு அனுப்புவதா? என திருக்கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்கின்றனர். இதுதொடர்பாக அறநிலையத்துறையினர் தீவிர ஆலோசனையும் மேற்கொண்டு உள்ளனர்.

நேற்று முன்தினம் யானையை பரிசோதித்த மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர், தெய்வானை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து பழங்கள் உள்ளிட்டவை உணவாக வழங்கப்படுகிறது. இருப்பினும் யானை அமைதியாகவே உள்ளது. நெருங்கி பழகிய பாகன், உயிரிழந்து விட்டதையறிந்து யானை சோகமாக உள்ளதாக கூறப்படுகிறது. யானை தங்குமிட பகுதியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியே மிகுந்த அமைதியுடன் காணப்படுகிறது. திருச்சியைச் சேர்ந்த சுகுமாரன், தெய்வானை யானையை வாங்கிக் கொடுத்துள்ளார். இது அசாம் அல்லது மேகாலயாவில் இருந்து வாங்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

The post பாகன் உள்பட இருவரை கொன்ற திருச்செந்தூர் கோயில் யானை முகாமிற்கு செல்கிறதா?: அறநிலையத்துறை தீவிர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Temple ,Bagan ,Charities Department ,Tiruchendur ,Subramania ,Swamy ,Temple ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து...