×

புதுச்சேரி அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு; முடங்கிய சரக்கு கப்பல் போக்குவரத்து திட்டம் மீண்டும் உயிர் பெறுவது எப்போது?: ஓராண்டாக இடத்தை ஆக்கிரமித்திருக்கும் அவலம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆரம்பித்த வேகத்திலேயே சரக்கு கப்பல்களை கையாளும் திட்டம் முடங்கியுள்ளது. இதனால் புதுச்சேரி அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இதில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. புதுச்சேரி உப்பளத்தில் புதிய துறைமுகம் கடந்த 1994ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த துறைமுகம் மூலம் 2006 வரையிலும் சரக்குகள் கையாளப்பட்டது. அதன்பிறகு எந்த கப்பலும் துறைமுகத்துக்கு வரவில்லை. பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல்களில் வரும் சரக்குகளை சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்து, பல்வேறு ஊர்களுக்கு சாலை மார்க்கமாக லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதனால் சென்னை சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகையால் புதுச்சேரி துறைமுகத்துக்கு புத்துயிர் ஊட்டவும், சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சென்னை- புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க கடந்த 2017ம் ஆண்டு சென்னை துறைமுகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்பிறகு, துறைமுக முகத்துவாரத்தில் சரக்கு கப்பல் சென்று வருவதற்காக ஆழப்படுத்தும் பணி நடந்தது. நீண்ட இழுபறிக்குப்பின் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை- புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. குளோபல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த `ஹோப் செவன்’ என்ற மிதவை கப்பல் வாரத்துக்கு இருமுறை புதுச்சேரி- சென்னை இடையே சரக்குகளை ஏற்றிச்சென்றது. 106 கன்டெய்னர்களில் சரக்குகள் கையாளப்பட்டன. பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்குகளை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக புதுச்சேரி துறைமுகத்துக்கு எடுத்து வரப்பட்டது. இங்குள்ள குடோன்களில் வைக்கப்பட்டு, பின்னர் அவை சாலை மார்க்கமாக லாரிகளில் தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் புதுச்சேரி துறைமுகத்துக்கு வந்து, இங்கு சுங்கவரி உள்ளிட்ட கிளியரன்ஸ் அனைத்தும் முடிக்கப்பட்டு, சரக்கு கப்பல் மூலமாக சென்னை துறைமுகத்துக்கு சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையால் புதுச்சேரி அரசுக்கு வருவாய் கிடைத்ததுடன், சுமார் 1000 பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பும் அளித்து வந்தது. ஆனால் தொடங்கிய வேகத்தில் 2 மாதத்திலேயே இத்திட்டம் முடங்கிப் போய்விட்டது. 2 மாதம் மட்டுமே செயல்பட்ட நிலையில் 8 தடவை கப்பல் போக்குவரத்து நடந்தது. அதன்பிறகு சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. சரக்கு கப்பல் உரிமையாளருக்கும், கப்பலை வாடகைக்கு எடுத்து நடத்தும் நிறுவனத்துக்கும் இடையே உள்ள பிரச்னை இன்னமும் தீர்க்கப்படவில்லை. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சரக்கு கப்பல் துறைமுகத்திலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருதரப்பு பிரச்னையால் அரசுக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் பறிபோய் உள்ளது. ஆகையால் அரசு இதில் தலையிட்டு பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து, மீண்டும் சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post புதுச்சேரி அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு; முடங்கிய சரக்கு கப்பல் போக்குவரத்து திட்டம் மீண்டும் உயிர் பெறுவது எப்போது?: ஓராண்டாக இடத்தை ஆக்கிரமித்திருக்கும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Puducherry government ,Puducherry ,Avalam ,Dinakaran ,
× RELATED விக்னேஷ் சிவன் மறுத்துள்ள நிலையில்...