×

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் மரக்குடோனில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க பல மணி நேரம் போராட்டம்

சேலம்: சேலம் சன்னியாசிகுண்டு மெயின்ரோடு பகுதியில் உள்ள மர குடோனில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமடைந்தது. சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் , இவர் அதே பகுதியில் மர அறுவை மில் மற்றும் குடோன் வைத்துள்ளார். இங்கிருந்து கதவு, ஜன்னல் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தயார் செய்து, பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறார். வட மாநிலங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று மாலை, வழக்கம் போல பணியை முடித்துவிட்டு மர குடோனை மூடிவிட்டு சென்றனர். இதனிடையே இரவு 10.30 மணியளவில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அருகில் சென்று பார்த்த போது, மர குடோன் பயங்கரமாக தீபிடித்து எரிந்தது.

இதனையடுத்து சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், மளமளவென தீ குடோன் முழுவதும் பரவியது. இதனையடுத்து, சேலம் சூரமங்கலம், ஆட்டையாம்பட்டி, ஓமலூர், வாழப்பாடி என பல்வேறு பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. குடோனை சுற்றி 20 அடிக்கும் அதிகமான உயரத்தில் சுற்றுச்சுவர் இருந்ததால், தீயை அணைக்க சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டு, அதன்பின்னர் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தீ விபத்தை காண நேரில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் பல மணி நேரம் தீயை அணைக்க போராடினர். மரக்குடோனுக்கு அருகிலேயே ஆயில் குடானும், ஏராளமான குடியிருப்புகளும் உள்ளது. இதனால், முதற்கட்டமாக குடியிருப்பில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, குடோனில் இருந்து தீ மேலும் பரவாதபடி தடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் சுமார் ரூ.50 லட்சத்திற்கும் மேலான மர பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இதில், மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் மரக்குடோனில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க பல மணி நேரம் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Marakudon ,Sanniashikundu ,Salem ,Wooden Kudon ,Salem Sanniasikund Mainroad ,Santosh ,Sanyashikundu ,Salem Kichippalayam ,Salem Sanyasikundu ,Dinakaran ,
× RELATED ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு...