- பூங்கா
- ரெட்டேரி ஏரி
- சென்னை
- சுற்றுச்சூழல்
- பூந்தி
- செமர்பம்பக்கம்
- பகல்
- சோசாவரம்
- போரூர்
- தெர்வாய் காண்டிகா
- சுற்றுச்சூழல் பூங்கா
- தின மலர்
சென்னை: அடுத்தாண்டு மே மாதத்திற்குள் ரெட்டேரி ஏரியில் ரூ.10 கோடி செலவில் ‘ஈகோ பார்க்’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் மற்றும் போரூர் ஏரிகள் மற்றும் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் போன்றவை பூர்த்தி செய்து வருகின்றன. இதன் காரணமாக, கோடை வெயில் சுட்டெரித்தாலும் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சென்னைவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னையின் வளர்ந்து வரும் தேவைகளை சமாளிக்கும் வகையில், குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க தமிழ்நாடு நீர்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை தீவிரமாக மேற்கொண்டு உள்ளது. இதையொட்டி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள 10 ஏரிகளை சீரமைக்கவும் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமம் முடிவு செய்துள்ளது.
இதற்காக ஏரிக்கரைகள் மேம்பாடு என்ற புதிய திட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஏரிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில், பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், செம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், அயனம்பாக்கம், கொளத்தூர், புழல் ஆகிய 12 ஏரிகள் சீரமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின்படி முதல்கட்டமாக, ரெட்டேரி ஏரியில் கொள்ளளவை அதிகரிக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில், 2019ம் ஆண்டு வறட்சியின் போது தண்ணீர் எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு நீர்வளத்துறை ஏரியை ஆழப்படுத்தவும், தூர்வாரவும், குடிநீர் ஆதாரமாக மாற்றவும் சுமார் ரூ.43.19 கோடி ஒதுக்கி பணிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்கப்பட்டது. ஏரியின் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏரியின் ஓரத்தில் நடைபாதை கட்டுவது உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் ஏரி மறுசீரமைக்கப்பட உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி கூறியதாவது: ஏரியின் கொள்ளளவு 32 மில்லியன் கன அடியில் இருந்து 45.13 மில்லியன் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ரெட்டேரி சந்திப்பில் இருந்து விநாயகபுரம், அறிஞர் அண்ணா நகர், மாதவரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கி 3 கி.மீ., தூரத்திற்கு குப்பை கொட்டுவது மற்றும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில் 1500 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. பறவைகள் வந்து செல்வதற்காக 3 தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஏரியிலிருந்து தூர்வாரப்பட்ட சேற்றைப் பயன்படுத்தி 200 மீட்டருக்கு 200 மீட்டர் மற்றும் 160 மீட்டருக்கு 160 மீட்டர் என நடுவில் 3 சிறிய அளவிலான தீவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தீவுகளில் 10,000 மரங்கன்றுகள், சிறப்பு வகை புற்கள் நடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: ஏரிகளை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏரிகளின் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஏரிகளின் பாதுகாப்பிற்காக அதன் வரலாறை ஆய்வு செய்து மறுசீரமைக்கப்படும். ரெட்டேரியை முக்கிய அடையாளமாக மாற்றுவதற்காக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 கோடியில் இந்த ஏரி ஈகோ சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது. விளையாட்டு திடல்கள், நடைபாதை, சிற்பங்கள் அடங்கிய நுழைவாயில்கள், படகு சவாரி, சிறிய பாலங்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகள் உள்பட சுற்றுலாதலமாக மாறுகிறது. மேலும் பறவைகள் வந்து செல்லும் இடமாகவும், வெப்பத்தை குறைக்கவும், தண்ணீர் எளிதாக செல்லும் இடமாகவும் மாற்றப்படுகிறது. இந்த பணிகள் அடுத்தாண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
The post அடுத்தாண்டு மே மாதத்திற்குள் ரெட்டேரி ஏரியில் ரூ.10 கோடியில் ‘ஈகோ பார்க்’ அமைக்க திட்டம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.