×

பதவிக்காக கட்சிகள் பிளவுபட்ட நிலையில் உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எது?.. தேர்தல் முடிவை எதிர்நோக்கும் தலைவர்கள்

 

மும்பை: பதவிக்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பிளவுபட்ட நிலையில் உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எது? என்பது வரும் 23ம் தேதி தேர்தல் முடிவின் மூலம் தெரிந்துவிடும். மகாராஷ்டிராவில் இன்று சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் எதிர்கட்சி கூட்டணியான மகாவிகாஸ் அகாடிக்கும், ஆளுங் கட்சி கூட்டணியான மகாயுதிக்கும் இடையே நேரடிப் போட்டி இருந்தாலும், புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இரண்டு கூட்டணி கட்சிகளுக்கும் இடையிலான போட்டி குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவும், காங்கிரசும் 75 இடங்களில் நேருக்கு நேர் மோதுகின்றன.

இவற்றில் 35 இடங்கள் விதர்பா மண்டலத்தில் வருகின்றன. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் 53 இடங்களில் நேருக்கு நேர் மோதுகின்றன. இவற்றில் 27 இடங்கள் மும்பை, கொங்கன் மண்டலத்தில் வருகின்றன. அதேபோல் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் 41 இடங்களில் நேருக்கு நேர் மோதின. இவற்றில் 26 இடங்கள் மேற்கு மகாராஷ்டிராவில் உள்ளன. மேற்கண்ட புள்ளி விபரங்களின்படி பார்த்தால் மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடிப்படையாக கொண்டு தான், உண்மையான சிவசேனா யார்? உண்மையான தேசியவாத காங்கிரஸ் யார்? என்பது தெரியவரும்.

இவர்களுக்கு மத்தியில் நேரடிப் போட்டியில் இருக்கும் பாஜக – காங்கிரஸ் இடையிலான தொகுதிகளும் கவனத்தை பெற்றுள்ளன. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுக்கு பின்னர் மீண்டும் புதிய கூட்டணி உருவாகுமா? அல்லது ஏதாவது ஒரு கூட்டணி ஆட்சியமைக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டில் உத்தவ் தாக்கரே தலைமையில் (பாஜக – சிவசேனா கூட்டணி) மகாராஷ்டிராவில் ஆட்சி நடைபெற்றது. உத்தவ் தாக்கரேவுக்கும், பாஜகவுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதனை சாதகமாக்கிக் கொண்ட பாஜக, சிவசேனாவை இரண்டாக உடைத்தது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் ஒருபிரிவாக பிரிந்தனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் – சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி எதிர்கட்சியாக இருந்த நிலையில், தேசியவாத காங்கிரசையும் பாஜக உடைத்தது. அஜித் பவார் தலைமையில் சில தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஓரணியில் திரண்டனர். அதனால் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ், தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றனர். இவர்கள் கடந்த 2 ஆண்டாக ஆட்சி நடத்தி வந்த நிலையில், பிளவுபட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் உண்மையான தலைமை யார் என்பதை வரும் 23ம் தேதி மக்கள் தீர்மானிப்பார்கள். அதனால் தேர்தல் முடிவை மகாராஷ்டிரா மட்டுமன்றி, நாடே எதிர்நோக்கி உள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு ‘எக்ஸிட் போல்’
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த வாக்குப்பதிவுடன் அனைவரின் பார்வையும் இரு மாநிலங்களின் ‘எக்ஸிட் போல்’ எனப்படும் கருத்துக் கணிப்பு தொடர்பான முடிவுகள் மீதுதான் இருக்கிறது. இந்த கருத்துக்கணிப்பின்படி, மகாராஷ்டிராவில் மகாயுதி மீண்டும் ஆட்சியமைக்குமா? மகாவிகாஸ் அகாடி ஆட்சியை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் ஜார்கண்டில் ஆளும் இந்தியா கூட்டணியா? அல்லது பாஜக கூட்டணியா? என்ற கேள்வியும் உள்ளது.

தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வாக்குப்பதிவு முடிந்த பின்னரே கருத்துக் கணிப்புகளை வெளியிட முடியும். அதன்படி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் செய்தி சேனல்கள் மூலம் வெளியாகும். எவ்வாறாயினும், வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் யார் ஆட்சியமைப்பார்கள்? என்று தெளிவாகத் தெரியும். அப்போது கருத்துக் கணிப்பு முடிவுகள் பலித்ததா? பொய்த்ததா? என்பதும் தெரிந்துவிடும்.

The post பதவிக்காக கட்சிகள் பிளவுபட்ட நிலையில் உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் எது?.. தேர்தல் முடிவை எதிர்நோக்கும் தலைவர்கள் appeared first on Dinakaran.

Tags : Sivasena and ,Nationalist Congress ,Mumbai ,Sivasena ,Legislative Assembly ,Maharashtra ,Dinakaran ,
× RELATED மராட்டிய மகாயுதி கூட்டணி அரசில்...