×

திருச்செந்தூரில் இருவர் பலி எதிரொலி கோயில் யானைகளிடம் ஆசீர்வாதம், செல்பி எடுக்க பக்தர்களுக்கு தடை

நெல்லை: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உள்பட இருவர் பலியானதன் எதிரொலியாக கோயில் யானைகளிடம் பக்தர்கள் ஆசீர்வாதம் வாங்கவோ, செல்பி எடுக்கவோ அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்படும் யானை தெய்வானை, கடந்த 18ம் தேதி மாலை பாகனின் உறவினரான சிசுபாலன் செல்பி எடுத்தபோது தாக்கியதில் அவரும், காப்பாற்ற முயன்ற பாகன் உதயகுமாரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளை கோயில் வளாகத்தில் நிறுத்தி பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கவும், செல்பி எடுக்கவும், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பக்தர்கள் யானைகளுக்கு நேரடியாக வழங்கவும் பாதுகாப்பு கருதி அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

இதன்படி நெல்லையப்பர் கோயில் காந்திமதி, சங்கரன்கோவில் யானை கோமதி, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில், இரட்டை திருப்பதி கோயில், திருக்குறுங்குடி கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள யானைகள் கடந்த 18ம் தேதி மாலை முதல் பக்தர்கள் பக்கத்தில் சென்று பார்க்க முடியாதபடி, வழக்கமாக நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் அடைக்கப்பட்டுள்ளது. பாகன்கள் மட்டும் கூடத்திற்குள் சென்று உணவு, பழங்கள், தண்ணீர் வைத்து வருகின்றனர்.

* இயல்பு நிலைக்கு திரும்பியது யானை
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 26 வயதான தெய்வானை யானை தாக்கி, மிதித்ததில் பாகன் உதயகுமார் (46) அவரது உறவினரான முன்னாள் ராணுவ வீரர் சிசுபாலன் (59) ஆகியோர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இறந்து கிடந்த பாகன் உதயகுமாரை பார்த்து யானை கண்ணீர் விட்டு அழுதது. சாப்பிட மறுத்தது.

இந்நிலையில் நேற்று காலை கால்நடை துறை மண்டல இணை இயக்குநர் செல்வகுமார், மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன், திருச்செந்தூர் கோட்ட வனச்சரக அலுவலர் கவின் ஆகியோர், கோயில் குடிலில் உள்ள யானையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள், யானை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தெரிவித்தனர். இன்னும் 5 நாட்களுக்கு யானை, வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.

அதன் பிறகு யானையின் செயல்பாடுகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது. பாகன் ராதாகிருஷ்ணன், நேற்று காலை யானைக்கு உணவாக புற்கள், பழங்களை வழங்கினார். யானை தங்கும் இடத்தில் உட்கார்ந்து ஆரஞ்சு பழத்தை உரித்து உருட்டி விட்டார். அதை துதிக்கையால் லாவகமாக எடுத்து யானை சாப்பிட்டது. எனினும், யானையை முதுமலை அல்லது திருச்சியில் உள்ள முகாமிற்கு அனுப்பலாமா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். பாகன் உதயகுமாரின் உடல் திருச்செந்தூரில் உள்ள மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

The post திருச்செந்தூரில் இருவர் பலி எதிரொலி கோயில் யானைகளிடம் ஆசீர்வாதம், செல்பி எடுக்க பக்தர்களுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Nellai ,temple ,Bagan ,Subramania Swamy Temple ,
× RELATED திருச்செந்தூர் கோயிலில் 7...