ராமநாதபுரம் மாவட்டம் உலக புகழ்பெற்ற ஆன்மிக புண்ணிய பூமியாக உள்ளது. புராதன சின்னங்கள், வியக்க வைக்கும் கட்டிட கலைகள், சிற்பங்களுடன் கூடிய தேசிய சுற்றுலாத்தலமாக ராமேஸ்வரம் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மேலும் பாம்பன் பாலம், பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர், ஒற்றை கல்லால் ஆன மரகத நடராஜர் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 44வது திருத்தலமான திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் பெருமாள் கோயில், தேவிப்பட்டினம் நவபாஷாணம், ஏர்வாடி தர்ஹா, தனுஷ்கோடி புராதன எச்சங்கள், அரிச்சல்முனை கடற்கரை, குந்துக்கால் விவேகானந்தர் மண்டபம், குருசடை தீவு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் போன்றவை சுற்றுலாப்பயணிகள் அடிக்கடி விசிட் செய்யும் இடமாக விளங்குகிறது.
* மீன் வர்த்தகம்…
மண்டபம் தொடங்கி பாம்பன், ராமேஸ்வரம் வரையிலும் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளதால், அதிகளவில் மீன்பிடி தொழில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மீன் போன்ற கடல்சார் உணவு உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுமார் 1,076 கி.மீ நீளமுள்ள தமிழ்நாடு கடற்கரையில் மீன்பிடி உள்ளிட்ட கடல்சார் தொழில் அடிப்படையில் அமைந்துள்ள மூன்றாம் பகுதி தனுஷ்கோடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் உள்ளது.
இதில் தனுஷ்கோடி பகுதி பாக் நீரிணை பகுதியாக அழைக்கப்படுகிறது. இந்த பாக் நீரிணை என்பது நாகப்பட்டினம் முதல் ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதிக்கு உட்பட்ட எல்லையை குறிக்கிறது. இங்கு பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள் உள்ளிட்ட மன்னர்கள் ஆட்சி காலத்திலேயே இலங்கை, மலேசியா, வளைகுடா, ஐரோப்பிய நாடுகளுக்கும் தொண்டி, தேவிப்பட்டினம், பெரியபட்டினம், கீழக்கரை, ராமேஸ்வரத்தில் இருந்து வணிகம் மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து இருந்துள்ளது.
* செழிப்பான துறைமுகம்
வாலிநோக்கம் 1980 வரை வணிகரீதியான கப்பல் போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டும், உடைக்கும் துறைமுகமுமாக செயல்பட்டது. இத்தகைய கடல் தொழில் சிறந்து விளங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் ஒரு பழங்கால கடற்கரை கிராமம். இங்கு முத்து, சங்கு, பவளத்தொழிலும் சிறப்பாக நடந்ததால் 18, 19ம் நூற்றாண்டு வரை இது ஒரு செழிப்பான துறைமுக நகரமாக விளங்கியது. தென்நாட்டின் தலைநகர் எனப்படும் மதுரையின் நுழைவாயிலாகவும் இருந்துள்ளது.
கடல் வணிக ரீதியாக வந்த அரேபியர்கள் தேவிபட்டினத்தில் தங்கி, தமிழ்மொழியை அறிந்து கற்றுக்கொள்ளும் அளவிற்கு சிறப்புக்குரிய நகரமாக இருந்தது. இங்கு வளம் செழித்த ஐரோப்பிய நாடுகளில் வணிகம் நடத்தக் கூடிய அளவிற்கு வியாபார தொலைநோக்கு கொண்டவர்கள் வாழ்ந்துள்ளனர். இன்றும் பழமையான 7க்கும் மேற்பட்ட மசூதிகள் இங்கு உள்ளன. இந்து, இஸ்லாமியர் ஒற்றுமையாக இருந்து வணிகம் நடந்த பெருமையும் உண்டு. சில பொருளாதார வீழ்ச்சிகளால் 1954க்கு பிறகு இத்துறைமுகம் செயல்படுவது நின்றது. அன்று முதல் மீன்பிடி தொழில் மட்டுமே சிறிய அளவில் நடந்து வருகிறது.
* 50 பயணிகளுடன்…
நவபாஷாணம் இருப்பதால் ஆன்மிக சுற்றுலாதலமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்புக்குரிய தேவிப்பட்டினம் முதல் ராமேஸ்வரம் வரை கப்பல் பயண சுற்றுலாத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதாவது, தேவிப்பட்டினம் முதல் பாம்பன், ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் 50 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதி கொண்ட சிறிய ரக கப்பல்களை பயன்படுத்தி 3 மணிநேரத்தில் சுற்றுலா சேவையை துவக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.
இதன்படி கப்பல்களை இயக்க விரும்பும் நிறுவனங்கள் கடந்த அக். 7க்குள் விண்ணப்பிக்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் முறையாக அறிவிப்பு செய்தது. அதன்படி சில நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளது. முறையான பரிசீலனைக்கு பிறகு உரிமம் வழங்கப்பட உள்ளது. இதன் பிறகு தேவிப்பட்டினம், பாம்பன், ராமேஸ்வரம் கடல் வழித்தடத்தில் செயற்கைக்கோள், ரேடார் போன்ற நவீன கருவிகளை பயன்படுத்தி முறையான வழித்தட பாதைகளை கண்டறிந்து சோதனை செய்த பிறகு கப்பல் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மழைக்காலமாக இருப்பதால் 2025, மார்ச் மாதம் அல்லது அதற்கு பிறகு இந்த கப்பல் சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுற்றுலா சேவை என்பதனால், சலுகை கட்டணம் நிர்ணயிக்கப்படும். தமிழக அரசின் இந்த திட்டத்தை, சுற்றுலாப்பயணிகள், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
* தீவுகளுக்கும் திட்டம் விரிவாக்கம் ஆகுமா?
ராமநாதபுரம் மாவட்ட கடல் எல்லையானது தொண்டி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் முதல் சாயல்குடி அருகே வேம்பார் (தூத்துக்குடி மாவட்டம்) வரையிலும் அமைந்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் முதன்முறையாக 1974ல் யுனெஸ்ேகாவால் பரிந்துரை செய்யப்பட்டு, ஒன்றிய அரசால் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் அமைக்கப்பட்டது. 1989 முதல் கடல்சார் உயிர்கோள காப்பகம், தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா தேசிய பூங்காவாகவும் விளங்குகிறது.
இந்த மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, வான்தீவு, காசுவார் தீவு, ஆனையப்பர்தீவு, உப்புத்தண்ணீர் தீவு, புலுவினிசல்லி தீவு, நல்லத்தண்ணீர் தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, வாலிமுனைதீவு, அப்பாதீவு, பூவரசன்பட்டிதீவு, முள்ளிதீவு, முசல்தீவு, மனோலிபுட்டி தீவு, மனோலிதீவு, பூமரிச்சான்தீவு, புள்ளிவாசல்தீவு, குருசடை தீவு, சிங்கில்தீவு உள்ளிட்ட 21 குட்டி தீவுகள் அமைந்துள்ளன.
இந்த குட்டி தீவுகள் மற்றும் பாதுகாப்பு அரணாக விளங்கும் அரியவகை பவளப் பாறைகள் மீன்களின் இருப்பிடமாகவும், இயற்கை பேரிடர் காலங்களில் மீனவ கிராமங்களுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. இதில் குருசடை தீவு, நல்லத்தண்ணீர் தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தீவுகளில் மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை இருப்பதால், பவளப்பாறை இல்லாத வழித்தடங்களின் வழியாக இப்பகுதிக்கும் சிறிய சுற்றுலா கப்பல் இயக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது குருசடைதீவு, ஏர்வாடி பிச்சை மூப்பன் வலசையில் சுற்றுச்சூழல் படகு சவாரி சுற்றுலா இருப்பது குறிப்பிடத்தக்கது.
* அரசுக்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு
கடலோர மற்றும் கடல் சார்ந்த சுற்றுலா உலகளவில் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. அந்த வகையில் கப்பல் சுற்றுலா வந்தால் தற்போதைய காலக்கட்டத்திற்கேற்ப சிறு துறைமுக வாய்ப்பாகவும் அமையும். இதனால் சிறிய ரக கப்பல் வந்து செல்லும் அளவில் துறைமுகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என்பதால், மேலும் விரிவாக்கம் செய்து வணிகரீதியாக கப்பல் போக்குவரத்து தொடங்கவும் வாய்ப்புள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மேம்படும். இதனால் அரசிற்கும் வருவாய் பெருகும் வாய்ப்புள்ளது.
The post தேவிப்பட்டினம் முதல் ராமேஸ்வரம் வரை 2025 மார்ச் முதல் கடல் அழகை ரசிக்க கப்பல் சுற்றுலா: தமிழக அரசின் திட்டத்துக்கு வரவேற்பு appeared first on Dinakaran.