நான்கு யுகங்களுக்கும் அதிபதியான சுவாமி ஐயப்பன், தர்மசாஸ்தாவின் அவதாரமாக உள்ளார். ஆதி(மூலம்) சாஸ்தா எட்டு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. சாஸ்தாவின் அவதாரங்கள் 8 என்பதற்கேற்ப 8 கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனால் அஷ்ட சாஸ்தா என அழைக்கப்படுகிறார். அதன்படி மூலமான ஆதிசாஸ்தா என்ற ஆதி பூதநாதர் 1) மகா சாஸ்தா, 2) வித்யா சாஸ்தா, 3) சம்மோகன சாஸ்தா, 4) பால சாஸ்தா, 5) கால சாஸ்தா, 6) கிராத சாஸ்தா, 7) ஆர்யா சாஸ்தா மற்றும் 8) தர்மசாஸ்தா என 8 அவதாரங்களாக அவதரித்துள்ளார்.
இதில் தர்மசாஸ்தாவை தவிர மற்ற 7 சாஸ்தாக்கள் அந்தந்த பகுதிகளில் நிரந்தரமாக கோயில் கொண்டுள்ளனர். இந்த சாஸ்தாக்களை மூலமாக கொண்டு சாஸ்தாக்களை வழிபடும் வாரிசுதாரர்கள், தங்களது குடிபெயர்தலுக்கு ஏற்றவாறு குடியேறிய பகுதிகளில் (நாடு, மாநிலம், மாவட்டம், ஊர்) அந்தந்த பகுதிக்கேற்றவாறு பற்பல பெயருடன் கிளை கோயில்களை அமைத்ததால் பல பெயர்களுடன் விளங்குகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் அய்யனார் என்ற பெயருடன் விளங்குகிறார். பெரும்பாலும் கொடுக்கப்பட்ட குலத்தின் குலதெய்வமாக விளங்குகிறார். குடிமக்களின் குடியையும், கிராம எல்லையை காக்கும் தெய்வமாகவும் விளங்குகிறார். பாலசாஸ்தா குழந்தை வடிவமாகவும், தர்மசாஸ்தா பாலகனாகவும் இருக்கின்றனர். பால சாஸ்தா, தர்மசாஸ்தாவை தவிர மற்ற 6 சாஸ்தாக்கள் பூரணை, புஷ்கலா என்ற இரு மனைவிகள், ஒரு மனைவி எனவும், கையில் ஆயுதம், தாமரை மலர் ஏந்தியும், யானை, குதிரை போன்ற வாகனங்களிலும் காட்சியளிக்கின்றனர்.
பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய 3 தேவிகளின் அம்சமாக உருவாக்கப்பட்டவரும், முனிவரின் மகளாக பிறந்த லீலாவதி என்ற பெண், சாபத்தால் அரக்கியாக உருவெடுத்த மகிஷிக்கு, சாபவிமோசனம் அளிப்பதற்காக கலியுகத்தில் தர்மசாஸ்தா, அரிஹர புத்திரனாக மணிகண்டனாக அவதரித்து ஐயப்பனாக அருள்புரிகிறார்.
அரிஹர (பெருமாள், சிவன்) புத்திரனாக அவதரித்தவர் என்பதை குறிப்பிடும் விதமாக கி.பி 7, 8ம் நூற்றாண்டில் அப்பர் எழுதிய தேவாரத்தில் சாத்தன் (சாஸ்தா) சிவன், விஷ்ணு பிள்ளையாகவும், பிரம்மச்சாரி கடவுள் என்றும் பாடிய பாடலில் இடம் பெற்றுள்ளார். இதனை போன்று மதுரை அருகே உள்ள திருமோகூர் பெருமாள் கோயிலில் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களில் சாஸ்தா பற்றி குறிப்பு உள்ளது. சுவாமியே சரணம் ஐயப்பா நாளையும் தரிசிப்போம்…
* சபரிமலையில் நாளை அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு
The post ஐயப்பன் அறிவோம் 6: அஷ்ட சாஸ்தா appeared first on Dinakaran.