×

வடகரை, அழிஞ்சிவாக்கம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்: நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

புழல்: செங்குன்றம் – மாதவரம் மாநில நெடுஞ்சாலையில், வடகரை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்றிய நெடுஞ்சாலைத்துறையினர், சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் மண்டபத்தை இடிக்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். செங்குன்றம் – மாதவரம் மாநில நெடுஞ்சாலை வடகரை, கிரான்ட் லைன் ஆகிய பகுதிகளில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் கிரான்ட் லைன் ஊராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது.

இப்பகுதி சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஆக்கிரமிப்பு செய்து ஏராளமானோர் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இங்கு, வியாபாரத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தங்கள் வாகனங்களை நிறுத்துவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பள்ளிக்குச் சென்று வரும் மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து, போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வாகனங்களில் செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பெரிதும் இடைஞ்சலாக உள்ளது.

இதுகுறித்து, பொதுமக்கள் சார்பில் மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு அம்பத்தூர் உட்கோட்ட பொறியாளர் மகேஸ்வரன் ஆகியோரின் மேற்பார்வையில், இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று வடகரை பகுதியிலிருந்து கிரான்ட் லைன் வரை உள்ள 2 கிலோமீட்டர் தூரத்தில் சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. மேலும், அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயில் மண்டபம் இடிப்பு: சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிலம்பாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. கிராம தேவதையான சிலம்பாத்தம்மன் கோயில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலைக்காக கோயிலின் முகப்பு மண்டபத்தை இடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது. பல ஆண்டுகளாக கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் மண்டபத்தை இடிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. நெடுஞ்சாலைத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில், நெடுஞ்சாலை துறையினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக கோயிலின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்ட நிலையில், கோயிலின் முகப்பு மண்டபத்தை தனியாக கட்டர் இயந்திரங்களைக்கொண்டு அறுத்து, பின்னர் இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கோயிலுக்கு அருகே அமைந்துள்ள வேப்பமரம் மற்றும் அரச மரத்தை வேருடன் பிடுங்கி, மறுநடவு செய்யவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இப்பணிக்காக செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராஜா ராபர்ட் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே கோயிலின் முகப்பு மண்டபத்தை இடிப்பதால், சாலையில் நின்றபடி சாமி கும்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோயிலை புதிதாக கட்டுவதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து தராமல் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு அருகில் மாற்று இடம் பெற்றுத்தந்து புதிதாக கோயிலை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வடகரை, அழிஞ்சிவாக்கம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்: நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Vertical-Matawaram State Highway ,Amman Temple Hall ,Chowaram ,Temple Hall ,Dinakaran ,
× RELATED அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்...