×

2024 சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை : எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு மறைந்ததை அடுத்து, அவரது நினைவைப் போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ் சுப்புலட்சுமி என்ற பெயரில் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான ரொக்க விருதை 2005ம் ஆண்டு முதல் மியூசிக் அகாடமி, பிரபல ஆங்கில நாளிதழான தி இந்துவுடன் இணைந்து வழங்கி வருகிறது.அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2024ம் ஆண்டில் வரும் டிசம்பரில் 98-வது ஆண்டு விழாவில் பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருதை வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் இறை நம்பிக்கை கொண்ட எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை இறை நம்பிக்கை அற்ற டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த மனுவிற்கு மியூசிக் அகாடமி, தி இந்து குழுமம் ஆகியவை தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மேற்கண்ட மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என மியூசிக் அகாடமிக்கு தடை விதித்துள்ளார். அதே சமயம், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளார்.

The post 2024 சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Tags : M. S. ,Suppulakshmi ,D. M. Do ,Chennai High Court ,Chennai ,M. S. D. ,Supulakshmi ,Krishna ,M. S Supulakshmi ,
× RELATED எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை...