டெல்லி: எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பிரபல பின்னணி பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவை போற்றும் வகையில் 2005ம் ஆண்டு முதல் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 98வது ஆண்டு விழாவில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க அனுமதித்த உத்தரவை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், உத்தரவு பிறப்பிக்கும் வரை `சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி.எம் கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை தான் பெற்றுள்ளதாக டி.எம்.கிருஷ்ணா கூறிக் கொள்ளக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசனின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க மியூசிக் அகாடமி, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.