×

போலி ஆவணம் தயாரித்து ரூ.65.50 லட்சம் மோசடி செய்தவர் பிடிபட்டார்: ஆவடி தனிப்படை போலீசார் நடவடிக்கை

ஆவடி: போலி ஆவணம் தயாரித்து ரூ.65.50 லட்சம் மோசடி செய்தவரை ஆவடி தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் மனபாடியநல்லூர் மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் (56) என்பவர் கடந்த ஜூலை 26ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில் அவர், கடந்த ஜனவரி மாதம் கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த இளங்குமரன் (49) என்பவர் எனக்கு அறிமுகமானார்.

தன்னிடம் மாதவரம், கொரட்டூர் மற்றும் பொன்னேரி ஆகிய இடங்களில் நிலம் இருப்பதாகக் கூறினார். ஆனால் வேறு ஒருவர் நிலத்தை, தனது நிலம் என்று கூறி போலியாக ஆவணம் தயார் செய்து எனக்கு ஒப்பந்த கிரையம் பேசி என்னிடம் இருந்து ரூ.65.50 லட்சம் வரை வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் பெற்றுக்கொண்டு நிலத்தை மட்டுமின்றி பணத்தையும் தராமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் மற்றும் காவல் துணை ஆணையாளர் பி.பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த இளங்குமரன் (49) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post போலி ஆவணம் தயாரித்து ரூ.65.50 லட்சம் மோசடி செய்தவர் பிடிபட்டார்: ஆவடி தனிப்படை போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Avadi ,force ,Ramanathan ,Mondiamman Nagar ,Manapathiyanallur ,Central Crime Branch ,Aavadi Police Commissionerate ,Aavadi Special Police Action ,Dinakaran ,
× RELATED ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா...