‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ என்பதற்கேற்ப தொழில், கல்வி, வேலை உள்ளிட்டவைகளுக்காக வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து நாள்தோறும் சென்னையில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின்படி 1,08,00,000 மக்கள் தொகை கொண்ட மாநகரமாக சென்னை திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் ஒன்றாக சென்னை உள்ளது.
வணிகம், வரலாற்று அடையாளங்கள் மற்றும் கலாச்சார மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான மையமாக இருப்பதால் சென்னைக்கு தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சென்னை மாநகராட்சி செய்து தருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட வசதிகளை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுக் கழிப்பறைகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல இடங்களில் உள்ள பொது கழிவறைகள் பூட்டிக் கிடக்கின்றன அல்லது தண்ணீர் இல்லாமல் காணப்படுகின்றன. சில இடங்களில், யாரும் பயன்படுத்த விரும்பாத அளவுக்கு அசுத்தமாக உள்ளது. இப்படி சென்னை கழிப்பறைகளை பற்றி நாள்தோறும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
சென்னையை பொறுத்தவரை தற்போது 1,110 கழிப்பறை வளாகங்கள் உள்ளன, இதில் 7,000 இருக்கைகள் மற்றும் 300 சிறுநீர் கழிப்பறைகள் உள்ளன என்று சென்னை மாநகராட்சி தரவுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற கழிப்பறை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையை அழகுபடுத்தும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக, ஸ்வச் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இளஞ்சிவப்பு வர்ணம் பூசப்பட்ட கழிப்பறைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேகமான இந்த வகை கழிப்பறைகள் இந்த ஆண்டு முதல் நகரம் முழுவதும் 445 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் போதிய பராமரிப்பு இல்லை என்றும் பலர் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் கழிப்பறைகள் முழுமையாகக் கட்டப்பட்ட போதிலும், அவை பூட்டப்பட்டிருந்தோ அல்லது திறக்கப்படாமலோ உள்ளன. இதற்கிடையில், செயல்படும் கழிவறைகளுக்கு போதிய தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையில் பல பகுதிகளில் வாடகைக்கு கடைகளை எடுத்து நடத்தி வருபவர்கள் மற்றும் அவர்களுக்கான வாடிக்கையாளர்கள் அப்பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை நம்பியே உள்ளனர். இதுபோன்ற நேரங்களில் மிகவும் சங்கடத்துக்கு ஆளாகின்றனர். இவ்வாறு பராமரிப்பு இல்லாமல் மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருக்கக்கூடிய கழிப்பறைகளை ஆய்வு செய்து அவற்றை சீரமைக்கவும், போதிய பராமரிப்புடன் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும், கைவிடப்பட்ட கழிப்பறைகள் மற்றும் கட்டப்பட்டு பூட்டியே கிடக்கும் கழிவறைகள் அனைத்தும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் 975 இடங்களில் ரூ.11.67 மதிப்பில் 7,166 இருக்கைகள் கொண்ட பொதுக் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏற்கனவே கட்டப்பட்டு பயன்பாடில்லாமல் இருக்கக்கூடிய கழிப்பறைகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. போதிய பராமரிப்பில்லாமல் மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருக்கக்கூடிய கழிப்பறைகளை கண்டறிந்து அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மாநகராட்சி வழங்கி வருகிறது. கழிப்பறைக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் வகையில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. பொதுக்கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கிறது. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாடின்றி கிடக்கும் கழிப்பறைகள்: ஆய்வு நடத்தி சீரமைக்க முடிவு appeared first on Dinakaran.