கூடலூர்: குமுளி மலைச்சாலையில் அரசு பஸ் பழுதாகி நின்றதால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தேனி மாவட்டத்தை ஒட்டிய கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தை இணைக்கும் சாலையாக குமுளி மலைச்சாலை உள்ளது. கேரளத்தை சேர்ந்தவர்களும் நமது மாநிலத்திற்கு வரவும், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு செல்லவும் இந்த மலைச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கம்பம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலம், தேயிலை, காப்பி தோட்டங்களில் பணியாற்ற ஜீப்களில் குமுளி மலைச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.
மேலும், இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனை, வண்டிப்பெரியாறு, பொன்குன்னம், காஞ்சிரப்பள்ளி, குமுளி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தேனி மாவட்டத்திற்கு வருவதற்கும் இந்த மலைச்சாலையை பயன்படுத்துகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது சபரிமலை கோயில் மண்டல கால பூஜைக்கு நடை திறக்கப்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்களும் அதிகளவில் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று குமுளி மலைச்சாலையில் இரைச்சல் பாலம் அருகே கம்பத்தில் இருந்து குமுளி சென்ற தமிழக அரசு பஸ் ஒன்று பழுதானது. இது குறுகிய சாலை என்பதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஐயப்ப பக்தர்களும், தேக்கடி மற்றும் தமிழக பகுதிக்கு சென்று வந்த சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர். பின்னர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை ஊழியர்கள் பழுதாகி நின்ற பஸ்சை சரி செய்தனர். போலீசார் வாகன போக்குவரத்தை சீரமைத்த பின் 2 மணி நேரத்துக்கு பின் வாகனங்கள் வழக்கம் போல சென்று வந்தன.
The post பஸ் பழுதாகி நின்றதால் குமுளி மலைச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.