×

மாநிலத்தின் மின்தேவை அதிகரித்துள்ளதால் தமிழக அனல் மின்நிலையங்களின் செயல்திறனை உயர்த்த நடவடிக்கை: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாடு மின்சாரவாரியம் மின் உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது. மேலும் நுகர்வோருக்கான சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தென்மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் அதிகப்படியான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதன்காரணமாக ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் மின்தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு ஈடாக மின் உற்பத்தியையும் பெருக்க வேண்டியதும் அவசியமாக திகழ்கிறது.

தேவைக்கு ஏற்ப மின்சாரம் உற்பத்தி இல்லாதபோது அல்லது மின் தேவை அதிகரிக்கும்போது மின்வாரியம் வெளிச்சந்தைகளில் மின்சாரம் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்ய நேரிடுகிறது. இதனால் மின் வாரியத்திற்கு கூடுதல் செலவுகள் ஏற்படுகிறது.  ன்இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மின்தேவையை சமாளிக்க தற்போது பயன்பாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அதனை முழு அளவில் பயன்படுத்தவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

பசுமை ஆற்றலை நோக்கி மின் உற்பத்தியை கொண்டு செல்லும் இந்த நேரத்தில், அனல் மின் நிலையங்களிலும் செயல்திறனை அதிகரிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் தற்போது வடசென்னை, மேட்டூர் மற்றும் தூத்துக்குடியில் 4,320 மெகாவாட் திறன் கொண்ட 5 அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இந்த அனல் மின் நிலையங்களின் சராசரி செயல்திறன் 67.14 சதவீதமாக இருக்கிறது. ஆனால் அனல்மின் நிலைய செயல்திறன் 85% இருக்க வேண்டும் என மத்திய மின்சார ஆணையம் வலியுறுத்துகிறது. அனல்மின் நிலையங்களை பொறுத்தவரை அதிகளவில் எழும் பிரச்னை கொதிகலன் குழாயில் கசிவு ஏற்படுவது. ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்னையை சரி செய்து மீண்டும் உற்பத்தியை தொடங்க 8 முதல் 10 மணி நேரம் வரை ஆகும். பழைய அனல் மின் நிலையங்களில் இது ஒரு பொதுவான பிரச்னை.

இது அனல் மின் நிலையங்களின் செயல்திறனை பெரிதளவில் பாதிக்கிறது. மத்திய மின்சார ஆணையத்தின் படி, அனல் மின் நிலையங்களை அதிக பயனுள்ளதாக மாற்ற அதன் செயல்திறனை 85 சதவீதத்தில் வைத்திருக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் பசுமை எரிசக்தி ஆதாரங்களை நோக்கி மின் உற்பத்தி அதிகரித்து வருவதால் இந்த இலக்கை அடைவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளில் 7 சதவீதம் செயல்திறனை மேம்படுத்தியுள்ளோம். மேலும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் அதை 12 சதவீதம் வரை உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். இதை அடைய, தடையின்றி நிலக்கரி கிடைப்பது அவசியம். ஒன்றிய அரசு எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தின் கீழ் நிலக்கரியை வழங்கும் அதே வேளையில், நமது நிலக்கரி தேவையில் 6 சதவீதம் இறக்குமதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளோம்.

சூரியசக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரபலமடைந்து வரும் நிலையில், அனல் மின் நிலையங்களில் செயல்திறனை அதிகரிப்பது சவாலாக உள்ளது. அனல் மின் நிலையங்களுடன் ஒப்பிடும்போது, ​​சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்ய செலவுகள் குறைவு. ரூ.3க்கும் குறைவாக ஒரு யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மே முதல் செப்டம்பர் வரையிலான காற்றாலை சீசனில் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆண்டு முழுவதும் சூரிய சக்தியும் கிடைக்கிறது. இதனால் முழு திறனில் அனல் மின் நிலையங்களை இயக்க வேண்டிய தேவையை குறைக்கிறது. இருப்பினும், புதுப்பிக்கத்தக்க சக்தியால் மட்டுமே மாநிலத்தின் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. அனல் மின் நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்தப்படுவதற்கான நேரம் இது, அதற்கான நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என மின்வாரியம் தெரிவிக்கிறது.

* கடந்த 2 ஆண்டுகளில் அனல் மின் நிலையங்களின் உற்பத்தி
(மில்லியன் யூனிட்களில்) மற்றும் செயல்திறன்
அனல் மின் நிலையம்
2022-23ம் ஆண்டு 2023-24ம் ஆண்டு
மின் உற்பத்தி செயல்திறன் மின் உற்பத்தி செயல்திறன்
வடசென்னை I 3,134.380 56.79% 3,616.450 65.35%
வடசென்னை II 5,395.744 51.75% 5805.198 60.43%
மேட்டூர் I 5,440.436 73.33% 6,370.015 78.68%
மேட்டூர் II 3,000.694 57.09% 3,202.150 60.76%
தூத்துக்குடி 5,717.922 62.16% 6,485.129 70.31%

The post மாநிலத்தின் மின்தேவை அதிகரித்துள்ளதால் தமிழக அனல் மின்நிலையங்களின் செயல்திறனை உயர்த்த நடவடிக்கை: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Power Board ,Chennai ,Tamil Nadu Electricity Board ,
× RELATED போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில்...