×

58 வயதில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; தோற்றாலும் நானே வென்றேன்!: குத்துச்சண்டை ஜாம்பவான் டைசன் நெகிழ்ச்சி

டெக்சாஸ்: ஜேக் பாலுடன் நடந்த குத்துச் சண்டை போட்டியில் தோற்றாலும், வெற்றி பெற்றதை போன்ற அசாத்திய மனநிலையில் உள்ளதாக, குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
குத்துச் சண்டை உலகின் மகத்தான வீரராக கருதப்படுபவர் மைக் டைசன் 58. அமெரிக்காவை சேர்ந்த இவர், 59 முதல் தர ஹெவிவெயிட் குத்துச் சண்டைகளில் மோதி, 50ல் வெற்றி பெற்றுள்ளார். 7 போட்டிகள் தோல்வியிலும், 2 டிராவிலும் முடிந்தன. இவர் பெற்ற வெற்றிகளில் 22, நாக்அவுட் முறையில் கிடைத்தவை. அதிலும், 12 போட்டிகளில் பங்கேற்றோர், முதல் சுற்றிலேயே டைசனின் குத்துக்களை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தனர். ஒரு போட்டியில், 90 விநாடிகளில் எதிராளியை பதம் பார்த்து அசைக்க முடியாத சாதனையை படைத்துள்ளார் டைசன். கடந்த 2005க்கு பின் குத்துச் சண்டை போட்டி பக்கம் போகாத டைசனை, 27 வயதே ஆன, யூடியுப் பிரபலமும், குத்துச் சண்டை வீரருமான ஜேக் பால் போட்டிக்கு வருமாறு சவால் விட்டார். அதை டைசனும் ஏற்றுக் கொண்டார். கடந்த ஜூனில் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், வயிற்றில் அல்சர் உள்ளிட்ட பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்ட டைசனால் அந்த போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. அதன் பின், நேற்று முன்தினம் டைசன் – ஜேக் பால் இடையே 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் தலா 2 நிமிடம் கொண்ட 8 ரவுண்டு போட்டி நடத்தப்பட்டது.

முதல் ரவுண்டிலேயே ஜேக்கின் குத்துக்களை தாங்காமல் டைசன் சுருண்டு விழுவார் என, அவரது சகோதரர் லோகன் பால் எச்சரித்திருந்தார். ஆனால், 58 வயதானாலும், ஜேக் பாலுடன் டைசன் சளைக்காமல் மோதினார். டைசனை நெருங்கினால் ஒரே குத்தில் போட்டு தள்ளி விடுவார் என அறிந்திருந்த ஜேக் பால், கைக்கு எட்டும் துாரத்தில் செல்லாமல் போக்கு காட்டியே டைசனை அலைக்கழித்தார். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் டைசன் மீது பல குத்துக்களையும் விட்டார் ஜேக். முதல் ரவுண்டுக்கு பின், வயது முதிர்வு காரணமாக சோர்வடைந்து போயிருந்த டைசன், புள்ளிகள் அடிப்படையில் ஜேக் பாலிடம் தோற்று போனார். இருப்பினும், 8 ரவுண்டுகள் நாக்அவுட் ஆகாமல் கெத்தாக டைசன் நிமிர்ந்து நின்றது, குத்து சண்டை ரசிகர்கள் மத்தியில் பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், எக்ஸ் சமூக தளத்தில் டைசன் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஜேக் பாலுடனான போட்டியில் தோற்றிருந்தாலும், வெற்றி பெற்றதை போன்ற, அசாத்திய மன நிலையில் உள்ளேன்.

போட்டி நடந்த அந்த இரவுக்கு நான் நன்றி உடையவன். தோற்றதில் எனக்கு துளியும் வருத்தமில்லை. உண்மையை சொல்வதென்றால், கடந்த ஜூன் மாதம், உடல் நலக்குறைவால் நான் அநேகமாக இறந்தே போய் விட்டேன் எனலாம். 8 முறை எனக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. 12 கிலோ எடை குறைந்தேன். உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெற கடுமையாக போராட வேண்டி இருந்தது. என் வயதில் பாதி வயதுடைய, திறமையான குத்துச் சண்டை வீரர் ஜேக் பாலுடன், அரங்கம் முழுதும் நிறைந்திருந்த ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே, என் குழந்தைகள் முன்னிலையில் 8 ரவுண்டுகளையும் முழுமையாக போராடி நின்ற அனுபவம், குத்துச் சண்டை வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம். நன்றி. இவ்வாறு மைக் டைசன் கூறியுள்ளார். டைசனின் இந்த பதிவுக்கு, உலகத்தின் பெரும் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரும், எக்ஸ் சமூக தள உரிமையாளருமான எலான் மஸ்க், ‘பிரேவோ’ என குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

The post 58 வயதில் யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; தோற்றாலும் நானே வென்றேன்!: குத்துச்சண்டை ஜாம்பவான் டைசன் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tyson Leschi ,TEXAS ,Mike Tyson ,Jack Paul ,Dinakaran ,
× RELATED உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...