×

திருமங்கலம் அருகே கோயில் திருவிழா; 50 ஆடுகள் வெட்டி அன்னதானம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருமங்கலம்: திருமங்கலம் அடுத்த அம்மாபட்டி சடச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. திருமங்கலம் அருகே அம்மாபட்டி கிராமத்தின் காவல் தெய்வமாக சடச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக பொங்கல் திருவிழா நடைபெறும். விவசாயம் செழிக்கவும், நினைத்த காரியம் கைகூடவும் வேண்டிக்கொண்டு, கிராமமக்கள் இங்கு வழிபாடு நடத்துவர். இதன்படி நேற்று முன்தினம் துவங்கிய திருவிழாவிற்காக கிராம மக்கள் விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்களை கோயிலுக்கு அர்ப்பணித்து பலியிட்டப்பட்டது. ஆடுகளின் ரத்தம் கோயிலில் உள்ள தொட்டிக்குள் விடப்பட்டது. இதனை தொடர்ந்து அசைவ உணவு சமையல் துவங்கி நேற்று காலை வரையில் நடைபெற்றது. பின்னர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அம்மாபட்டி, பன்னிகுண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, காங்கேயநத்தம், சாத்தங்குடி, மீனாட்சிபுரம், திருமங்கலம், உசிலம்பட்டி, தும்மகுண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அம்மாபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

இந்த திருவிழா குறித்து அம்மாபட்டி பொதுமக்கள் கூறுகையில், ‘‘இந்த அம்மன் கோயிலில் இருந்து எடுத்து செல்லப்பட்ட மண்ணை வைத்து கிராமத்தில் மற்ற கோயில்கள் கட்டுவதற்கு அம்மன் உத்தரவிடுவார். கிராம மக்களிடம் ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெறுகிறது. விவசாயம் செழிக்கவும், நினைத்த காரியங்கள் கைகூடவும் இக்கோயிலில் பக்தர்கள் வேண்டிக்கொண்டு, அதற்கு காணிக்கையாக ஆடுகள் வழங்குவர்‘‘ என்றனர்.

The post திருமங்கலம் அருகே கோயில் திருவிழா; 50 ஆடுகள் வெட்டி அன்னதானம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Temple festival ,Tirumangalam ,of 50 Goats ,Thirumangalam ,Pongal festival ,Ammapatti Satachiamman temple ,Satachiamman temple ,Ammapatti ,of 50 goats and ,
× RELATED மேலூர் அருகே வீர காளியம்மன் கோயில் திருவிழா: பால்குடம் சுமந்த பக்தர்கள்