×
Saravana Stores

அரியலூர் – பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.174 கோடியில் 21,822 பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15ம் தேதி அரியலூர் – பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.174 கோடியில் 21,822 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் அதிக வரவேற்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வர் மு.க.ஸ்டாலின் அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் கடந்த 15ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி ஏழை எளியோர்க்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1000 கோடி முதலீட்டான புதிய காலணிகள் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த காலணி தொழிற்சாலை 15,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய அருமையான திட்டமாகும். இந்த காலணி தொழிற்சாலைக்கு அருகே வசித்துவரும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடியின மக்களுக்கு 3.52 ஹெக்டேர் நிலத்தில் இலவச வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன.

திராவிட மாடல் ஆட்சியில், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக ரூ.29 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி அனல்மின் உற்பத்தி திட்டத்திற்காக 2005ம் ஆண்டு வரை 13 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட 8,373 ஏக்கர் நிலம் – அனல் மின் திட்டத்தை செயல்படுத்திட சாத்தியமில்லை என்ற முடிவு எட்டிய பிறகு 25 ஆண்டுகளாக காத்திருக்கும் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிலமதிப்பு தொகையை திரும்பப்பெறாமல் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது.

இவை எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஒருநாள் பயணத்தின் விளைவாக அரியலூர் மாவட்டம் பெற்றுள்ள முக்கியமான பயன்களாகும். இரண்டாவது கட்டமாக ரூ.22 கோடி மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தின் 2ம் தொகுப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 76,075 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

அந்த நிகழ்ச்சிக்கு பெருந்திரளாக வருகைதந்த மகளிர் கூட்டம் முதல்வரின் இந்த திட்டத்தின் மூலம் எங்கள் குழந்தைகளும், நாங்களும் நலம் பெறுவோம் என்று கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதே நாளில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த விழாவில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.88 கோடி மதிப்பீட்டிலான 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். ரூ.170 கோடி மதிப்பில் 21,862 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களின் மக்கள் எழுச்சியோடு பெருந்திரளாக வருகை தந்து முதல்வரை வாழ்த்தி பாராட்டினார்.

இந்த விழாவில் பல அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றும்போது, “நான் பிரச்சினைகளை நேர்கொண்டு நிற்கிறேன். அந்த பிரச்சினையை தீர்க்கிறேன். மக்களுக்காக பார்த்துப் பார்த்து திட்டங்கள் தீட்டுகிறேன். திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன என்று கள ஆய்வு செய்கிறேன். சொன்னால் சொன்ன நாட்களுக்குள் திட்டங்களை திறந்து வைக்கிறேன். அதனால்தான், இந்த ஸ்டாலின் எங்கு சென்றாலும் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.

எங்கள் குறைகளை போக்குவார் என்ற நம்பிக்கையோடு தேடிவந்து மனுக்களை கொடுக்கிறார்கள், அந்த நம்பிக்கையை எந்நாளும் காப்பாற்றுவேன் என்று உறுதி தருகிறேன்” என பெருமிதத்தோடு குறிப்பிட்டார். ரூ.174 கோடியில் நலத்திட்டங்கள், தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியதற்கு முதல்வரை மக்கள் பாராட்டி உள்ளனர். முதல்வர் அதை குறிப்பிட்டு பேசும்பொழுது, ‘என்னால் வார்ப்பிக்கப்பட்ட அரியலூர் அரிமா அமைச்சர் சிவசங்கர்’ என்று பாராட்டினார்.

The post அரியலூர் – பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.174 கோடியில் 21,822 பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Ariyalur-Perambalur district ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,Tamil Nadu government ,Ariyalur - Perambalur district ,Dinakaran ,
× RELATED மக்களின் மகிழ்ச்சியால் சிலர் வயிறு எரிகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்