×

கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்ட சுற்றுலா பயணிகள் குன்னூர் மலைப்பாதையில் குவியும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

*வன விலங்குகளுக்கு ஆபத்தா?

குன்னூர் : சென்னை ஐகோர்ட் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் பயன்படுத்த தடை விதித்தது. அரசாணை நிலை எண் 84ன்படி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 2018-ல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதுசமயம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து அரசு மற்றும் தனியார் வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும், கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும், பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.

அரசு மற்றும் சென்னை ஐகோர்ட்டின் அறிவுரைகளை முறையாக செயல்படுத்தும் பொருட்டு நீலகிரி மாவட்டத்திற்குள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாரும் கொண்டு வர வேண்டாம் எனவும், நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும், மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் நிறுத்தி சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடையை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும் எனவும், தடையையும் மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை உடனடியாக மூடி முத்திரையிடப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

அதேபோல் நீலகிரியில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதற்கான ஆக்கப்பூர்வ திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். நீலகிரி டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் அதன் விலையில் இருந்து கூடுதலாக ரூ.10 வசூலித்து, மது பாட்டில்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மதுபாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.10ஐ திரும்ப வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மது பாட்டில்களை வீசி செல்வதால், வனவிலங்குகளின் கால்களில் காயங்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுவதாக, கருதி இந்த உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் 85% உள்ளூர் வாசிகள் இதனை பின்பற்றி வந்தாலும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கடைபிடிக்க தவறுகின்றனர். குறிப்பாக குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் சாலையோரங்களில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் அதிகளவில் வீசி செல்கின்றனர்.

இவ்வாறு வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை வனவிலங்குகள் உட்கொண்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் காலி மது பாட்டில்களை வீசி செல்வதால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எனவே மாவட்ட எல்லையோரப்பகுதிகளில் உள்ள நுழைவாயில்களில் முறையாக சோதனை செய்யப்படாததே இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உள்ளூர் வாகனங்கள் என்று கருதி, நுழைவாயில்களில் சோதனை செய்யாமல் விடுவதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் உட்பட தடை செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் புகார்கள் இருந்து வருகிறது. எனவே இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் கடைகளை கண்டறிந்து, ஆய்வு மேற்கொள்ளவும், மாவட்ட நுழைவாயில்களில் சோதனையை தீவிரபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

The post கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்ட சுற்றுலா பயணிகள் குன்னூர் மலைப்பாதையில் குவியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் appeared first on Dinakaran.

Tags : Gunnar mountainside ,Chennai Aycourt ,Neelgiri district ,Gunnar ,Dinakaran ,
× RELATED சென்னையில் நடக்கும் மலர்...