×

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டி.20 போட்டி; இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி: தொடரையும் கைப்பற்றி அசத்தல்

செயின்ட் லூசியா: 3வது போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்ததால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த இரண்டு டி20யிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதால் சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

அந்த அணியின் முதல் 5 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 5.4 ஓவரில் வெறும் 37 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன் பிறகு களமிறங்கிய கேப்டன் ரோவ்மேன் பவல் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆல்ரவுண்டர் ஷெப்பர்டு 28 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் விளாசிய பவல் 54 ரன்கள் எடுத்திருந்த போது ஒவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து பவுலிங்கில், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் துவக்க வீரர்கள் சால்ட் மற்றும் பட்லரை அவுட்டாக்கி அகீல் உசைன் அதிர்ச்சி அளித்தார். ஆனால் வில்ஜாக் 32, சாம்கரன் 41, லிவிங்ஸ்டன் 39 ரன் எடுத்தனர். இதனால் 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அகீல் உசைன் 4 விக்கெட்டுகள் எடுத்தார். கடந்த 2019 ஆண்டுக்கு பிறகு 5 முறை வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆட்ட நாயகனாக சாகிப் மஹ்மூத் தேர்வு செய்யப்பட்டார். 4 வது போட்டி வரும் 17ம்தேதி இதே மைதானத்தில் நடக்கிறது.

The post வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டி.20 போட்டி; இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி: தொடரையும் கைப்பற்றி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : T20I ,West Indies ,England ,St. Lucia ,T20 ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் முதல் டி20: 7 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி