×
Saravana Stores

இலங்கை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து பாம்பனில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மறியல்

* கடலில் குதித்து பெண்கள் தற்கொலை முயற்சி, போலீசாருடன் தள்ளுமுள்ளுவால் பதற்றம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து, ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் பாம்பன் சாலைப்பாலத்தை முற்றுகையிட்டு நேற்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 9ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், 3 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

கைதான மீனவர்கள் நவ. 25 வரை சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 10ம் தேதி ராமேஸ்வரத்தில் நடந்த அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில், மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரி, நவ. 12ல் (நேற்று) பாம்பன் சாலைப்பாலத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபடுவது என தீர்மானம் ஏற்றப்பட்டது. அதன்படி ராமேஸ்வரம் தீவு அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் பாம்பன் பேருந்து நிறுத்தத்தில் நேற்று குவிந்தனர்.

காலை 10 மணியளவில் பேரணியாக சென்று பாலத்தை முற்றுகையிட முயன்ற மீனவர்களை போலீசார் தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தினர். இதில் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை மீறி பாம்பன் சாலைப்பாலம் நுழைவில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், மீனவ பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்றனர்.

கைதான மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பாலத்தில் மறியல் நடந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற அனைத்து வாகனங்களும் பாம்பன் ஊராட்சி அலுவலகம் அருகேயும், ராமேஸ்வரம் வந்த அனைத்து வாகனங்களும் மண்டபம் முகாம் ஹெலிபேட் பகுதியிலும் நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து எஸ்பி சந்தீஷ், வருவாய் கோட்டாட்சியர் ராஜா மனோகரன், மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் பிரபாவதி ஆகியோர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது, இலங்கை சிறையில் பல மாதங்களாக வாடும் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேரின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கதறி அழுதபடி பாம்பன் வடக்கு கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.

பெண் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் மீனவப் பெண்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சில பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பெண்கள் பாம்பன் மீன்வளத்துறை அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

* நாகை மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து அனுமதி டோக்கனுடன் கடந்த 10ம்தேதி 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 40 கடல் மைல் தொலைவில் முல்லைத்தீவு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து படகுகளை விரட்டியடித்தனர்.

மீனவர்கள் வேறு பகுதிக்கு செல்ல முயன்றனர். ஆனால், தொடர்ந்து விரட்டிவந்த இலங்கை கடற்படையினர் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை டாட்டா நகரை சேர்ந்த செல்வநாதன்(40) என்பவருக்கு சொந்தமான ஒரு படகை சுற்றிவளைத்தனர். அதிலிருந்த படகு உரிமையாளர் செல்வநாதன் உள்பட 12 மீனவர்களை கைது செய்தனர். மேலும், விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

* 11 மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 9ம்தேதி வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரவீந்தர் (42), உலகநாதன்(38), அருள்நாதன்(29), வைத்தியநாதன்(30),குமரேசன்(37), மகேஷ்(55) மற்றும் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மதன்(27), மகேந்திரன்(20), முனிவேல் (66), விஜய்(31), விக்கி(18) ஆகிய 11 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இதேபோல் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 9ம்தேதி அஞ்சலி தேவிக்கு சொந்தமான விசைப்படகில் சிவக்குமார்(28), சூர்யா(23), சூரியபிரகாஷ்(25), கருப்பசாமி(26) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம் மீனவர்கள் 11 பேர் 2வது தடவையாக எல்லை தாண்டியதாக கூறி 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மகேஷ், விக்னேஷ், சூர்யா, சூர்யபிரகாஷ் ஆகிய 4 பேரை விடுதலை செய்துள்ளது.

‘நாடு, நாடாக சுற்றும் பிரதமர் எங்களைச் சந்திக்காதது ஏன்?’
மீனவ சங்கப் பிரதிநிதி சகாயம் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி நாடு நாடாக சுற்றி பிற நாட்டின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக செய்திகளின் மூலம் அறிகிறோம். இந்திய பொருளாதாரத்தில் அந்நியச் செலாவணியை அதிகம் ஈட்டி தருவதில் மீன் வர்த்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அப்படிப்பட்ட இந்த மீனவர்களின் வாழ்வாதார பிரச்னை குறித்து பிரதமர் மோடி கண்டுகொள்ளாமல் இருப்பது‌, ஒட்டுமொத்த மீனவ சமூகத்தை வஞ்சிக்கும் செயல். பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் 3 முறை ராமேஸ்வரம் வந்துள்ளார். ஆனால் இதுவரை மீனவர்கள் பிரச்னை குறித்து குறைகளை கேட்கவில்லை. நாங்கள் சந்திக்க முயற்சித்தபோது வாய்ப்பும் கொடுக்கவில்லை. இது மீனவ சமுதாயத்தை புறக்கணிக்கும் செயல்’’ என்றார்.

* நடப்பாண்டில் 497 மீனவர்கள் 66 படகுகள் சிறைபிடிப்பு
பாக் ஜலசந்தி கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 23 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. நேற்று நாகபட்டினம் மீனவர்கள் 12 பேரையும், ஒரு படகையும் கைது செய்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படை இந்தாண்டில் மட்டும் பல கோடி மதிப்பிலான 66 படகுகளையும், 497 மீனவர்களையும் கைது செய்துள்ளது.

The post இலங்கை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து பாம்பனில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Pampan ,Union government ,Sri Lanka ,Rameswaram ,Sri Lankan Navy ,Rameswaram island ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் தீவு – பாம்பனை இணைக்கும்...