×

செல்லூர் கண்மாயில் இருந்து 2 டன் ஆகாயத்தாமரை அகற்றம்

மதுரை, நவ. 15: மதுரை, செல்லூர் கண்மாயில் அதிகம் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் நாற்பது சதவீதம் வரை முடிந்துள்ள நிலையில், தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

மதுரை மாவட்டத்தில், வைகை ஆற்றின் கீழ் பாசன வசதி பெறும் கண்மாய்களில் முக்கியமானது செல்லூர் கண்மாய். மாநகரின் மைய பகுதியில் உள்ள இதன் பரப்பளவு 230 ஏக்கர். அரசு ஆவணங்களின்படி 130 ஏக்கர் உள்ளதாக, நீர்வளத்துறை கூறுகிறது. இக்கண்மாய்க்கு ஒருபுறமிருந்து சாத்தையார் அணை, லட்சுமிபுரம், வடுகபட்டி, பூதகுடி, மேலபனங்காடி, ஆணையூர், ஆலங்குளம், முடக்கத்தான் கண்மாய்களிலின் கால்வாய் வழியாகவும், மறுபுறம் விளாங்குடி, கோவில்பாப்பாக்குடி, கரிசல்குளம், சிலையனேரி, கூடல்நகர், தத்தனேரி ஆகிய கண்மாய்களிலின் கால்வாய் வழியாகவும் தண்ணீர் வருகிறது. இந்த இரு கால்வாய்கள் வழியாக வரும் தண்ணீர் நிரம்பி, மீனாம்பாள்புரம், நரிமேடு, செல்லூர், பந்தல்குடி, கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் வழியாக உபரிநீர் வைகை ஆற்றுக்கு செல்கிறது.

கண்மாயில் தொடரும் கழிவுநீர் கலப்பால் ஆகாயத்தாமரைகள் முளைப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்டங்களாக அதை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி, தற்போது வரை சுமார் 2 டன் அளவுள்ள 40 சதவீத ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் நடக்கும் நிலையில், கண்மாயில் கழிவுநீர் கலக்கும் இடங்கள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், நீர்வளத்துறை தரப்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் கூறியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post செல்லூர் கண்மாயில் இருந்து 2 டன் ஆகாயத்தாமரை அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Agayathamar ,Sellur Kanmai ,Madurai ,Vaigai river ,
× RELATED மாடுகள் சாலைகளில் திரிந்தால் பறிமுதல்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு