×

தூத்துக்குடியில் டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க் ரூ.300 கோடியில் திருச்செந்தூரை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க் மற்றும் ரூ.300 கோடியில் திருச்செந்தூரை மேம்படுத்த மாஸ்டர் பிளான் ஆகிய பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி சென்றார். நேற்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் மாவட்டம் முழுவதும் உள்ள 7,893 பயனாளிகளுக்கு, ரூ.206.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அனைத்து அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பட்டா மாற்றம், சான்றிதழ்கள், நிவாரண உதவித்தொகை உள்ளிட்டவை கோரி மக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வளர்ச்சித் திட்ட பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து விரிவாக துணை முதல்வர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தூத்துக்குடி மாவட்ட மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுடைய வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. மினி டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க், பக்தர்களுடைய வசதிக்காகவும் கோயிலை சுற்றியுள்ள மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருச்செந்தூர் மாஸ்டர் பிளான் என பல்வேறு முன்னெடுப்புகளை முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறார்.

முதல்வரின் முகவரி, மக்களிடம் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணும் பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இந்திய ஒன்றியத்திலேயே மருத்துவ கட்டமைப்புகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகின்றது. மருத்துவ சேவைகள் முழுமையாக மக்களுக்கு கிடைக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மகளிர் குழுக்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி மற்றும் விற்பனை நிலையங்களை பார்வையிட்டார். சுய உதவிக்குழு பெண்களால் தயாரிக்கப்பட்ட குளிர்பானத்தை ஆர்வமுடன் வாங்கி அருந்தினார்.

* உள்ளாட்சி தேர்தல் எப்போது?
ஆய்வு கூட்டத்துக்கு பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆய்வின் போது எல்லா திட்டங்களையும் முடிப்பது தொடர்பாக ஒரு காலக்கெடு கேட்டு உள்ளோம். அதிகாரிகளும் எந்தெந்த திட்டத்தை எப்போது முடிப்போம் என ஒரு காலக்கெடு தெரிவித்து உள்ளனர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து திட்டங்களை முதல்-அமைச்சர் அலுவலகம் கண்காணிக்கும். உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுப்பார். ஒன்றிய அரசு திட்டங்கள் எதையும் தமிழக அரசு பின்தொடரவில்லை. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் சொல்லி விட்டுத்தான் நான் வந்தேன். அவர் அவசர வேலையாக வெளிநாடு சென்று இருக்கிறார். அடுத்த 15 நாட்களில் திரும்பவும் வருவேன் என்று கூறியுள்ளேன். அப்போது இருவரும் சேர்ந்து பங்கேற்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

* தாசில்தார் ஆபீசில் திடீர் ஆய்வு
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு செல்லும் வழியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அவர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

* தகுதியுள்ள மகளிருக்கு ரூ.1000 கிடைக்க நடவடிக்கை
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். தொடர்ந்து, ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக ஒன்றிய செயலாளருமான தங்கப்பாண்டியன் – கலாவதி மகன் லட்சுமணன், தூத்துக்குடி ஆனந்தகுமார்-கிரகலட்சுமி மகள் அட்சயா ஆகியோரது திருமணம், தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து பேசுகையில்,கலைஞர் ஆட்சியாக இருந்தாலும் சரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியாக இருந்தாலும் சரி, பெண்களுக்குத் தான் மிக அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்களின் சுமையை போக்க குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் என்று எண்ணற்ற திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

The post தூத்துக்குடியில் டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க் ரூ.300 கோடியில் திருச்செந்தூரை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tidal Park ,Thoothukudi ,International Furniture Park ,Tiruchendur ,Deputy Chief Minister ,Udayanidhi Stal ,Udayanidhi Stalin ,DMK ,Tuticorin district ,Tuticorin ,Dinakaran ,
× RELATED மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா.....