×

முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி: குஷால் மெண்டிஸ், பெர்னாண்டோ சதம் விளாசல்

தம்புலா: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 12 ரன்னில் அவுட்டானார். அடுத்து, 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவிஷ்கா பெர்னாண்டோ-குஷால் மென்டிஸ் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தனர். சதமடித்த இருவரும் கூட்டாக சேர்ந்து 215 பந்துகளில் 206 ரன்கள் குவித்தனர். அவிஷ்கா பெர்னாண்டோ 100 ரன்னில் சோதி பந்துவீச்சில் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய குஷால் மெண்டிஸ் 128 பந்துகளில் 143 ரன்கள் குவித்தார். அதில், 2 சிக்சர்கள் மற்றும் 17 பவுண்டரிகள் அடங்கும். இந்நிலையில் இலங்கை அணி 49.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 324 ரன்கள் குவித்திருந்த போது மழை குறுக்கிட்டதால் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

நியூசிலாந்து பந்துவீச்சில் ஜேக்கப் டப்பி 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து நியூசிலாந்து பேட்டிங் ஆடியது. மழையால் ஆட்டம் பாதித்ததால் நியூசிலாந்து அணிக்கு 27 ஓவர்களில் 221 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்சில் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியதால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். வில் யங் 48, நிக்கோலஸ் 35, பிரேஸ்வெல் 34 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து 27 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இலங்கை பந்துவீச்சில் மதுஷனங்கா 3, அசலங்கா மற்றும் தீக்சனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை வகிக்க 2வது போட்டி 17ம் தேதி பல்லகலேயில் நடக்கிறது.

The post முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி: குஷால் மெண்டிஸ், பெர்னாண்டோ சதம் விளாசல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,New Zealand ,Kushal Mendis ,Fernando Satham Vlasal Tambula ,New Zealand cricket ,Dambulla ,Fernando Satham Vlasal ,Dinakaran ,
× RELATED தரவரிசை பட்டியலில் நியூசிக்கு 4ம் இடம்