×
Saravana Stores

குரு தத்துவம்

குருவை குறித்தும், குருவின் தத்துவம் குறித்தும் பார்த்துக் கொண்டு வருகிறோம். மேலும்,
இன்னும் சில விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

ராமானந்தர் யார்? கபீர் யார்? அதன் தொடர்ச்சியான யோகி யார்?

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் ராமானந்தராக வந்தது யார்… கபீர்தாசராக வந்தது யாரென்று பார்த்தால்… சாட்சாத் வேதவியாசர்தான் ராமானந்தராக வருகிறார். மேலும் சுகப் பிரம்மம்தான் கபீர்தாசராக வருவதாகவும் ஒரு கருத்து உண்டு. யார் துவாபர யுகத்தில் வியாசராகவும் சுகப் பிரம்மமாகவும் அவதரித்தார்களோ அவர்களே அதே வியாசரும் சுகப்பிரம்மமுமே ராமானந்தராகவும் கபீர்தாசராகவும் வந்து நமக்கு நாம தர்மத்தை காண்பித்து கொடுக்கிறார்கள். ஏனெனில், துவாபர யுகத்தில் பாகவத தர்மத்தை காண்பித்து கொடுப்பவர்கள் நமக்கு நாம தர்மத்தை காண்பித்து கொடுக்கிறார்கள்..

ஞானானந்தர் சுட்டிக் காட்டிய கபீரே யோகிராம்சுரத்குமார்

இந்த நாம தர்மத்தினுடைய சொரூபமாகவே யோகிராம்சுரத்குமார் மஹராஜ் இருந்ததனால் தான் ஞானானந்த சுவாமிகள் யோகிராம்சுரத்குமார் அவர்களை கபீர்தாசருடைய அவதாரமாக குறிப்பிடு கிறார்கள். ஏனெனில், ஞானானந்தர் சொல்லக்கூடிய விஷயங்கள் பலவை ஆச்சரியமாக இருக்கும். அவர்களின் வயதுக்கும் அவர்கள் சொல்கிற விஷயங்களுக்கும் தொடர்பே இல்லாத அளவிற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆச்சரியமாக ஷீர்டியில் பாபாவோடு கொஞ்சநாள் இருந்ததாக சொல்கிறார். இன்னொரு இடத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு தீட்சை அளிக்கும்போது அந்த காலகட்டத்தில் நான் அங்குதான் இருந்தேன் என்கிறார். அப்படியே சொல்லும்போது கபீர்தாசரோடு கொஞ்ச நாள் இருந்தேன் என்கிறார். அப்போது நீங்களெல்லாம் கபீர்தாசரை பார்க்க வேண்டுமா என்று கேட்கிறார். அப்போது, பக்தர்கள் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் வயதுக்கு அப்பாற்பட்டவர். நாங்கள் எப்படி எப்போது பார்ப்பது என்றார்கள். இதைப்பற்றி பேசிக் கொண்டே இருக்கும்போது யோகி சற்று தொலைவே நடந்து கொண்டு வருகிறார். அப்போது ஞானானந்தர் யோகியை சுட்டிக் காட்டி அதோ பாருங்கள் கபீர்தாசர் வந்து கொண்டிருக்கிறார் என்றாராம்.

ராமர் பட்டாபிஷேகத்திற்கு முன் முதலில் ராமனுடைய பாதுகைக்குதான் பட்டாபிஷேகம்

வேதாந்த தேசிகர் பாதுகா சஹஸ்ரத்தில் பாதுகையினுடைய மகிமையை நமக்கு முதலில் காண்பித்துக் கொடுத்ததே பரதாழ்வார் என்கிறார். பாதுகா சஹஸ்ரம் ஆரம்பிக்கும்போதே… பரதாய பரம் நமோஸ்து தஸ்மை ப்ரதமோதா ஹரணாய பக்திபாஜாம்! என்று தொடங்கு கிறார். பாதுகையின் பிரபாவத்தை காண்பித்துக் கொடுத்ததற்கு பரதன்தான் உதாரணம். காட்டில் ராமர் அமர்ந்திருக்கிறார். இங்கு ஆரண்யம் என்பது ஞானத்தின் குறியீடு. ராமரை பரதாழ்வார் எப்படிபார்த்தார். அண்ணா என்று பார்த்தாரா…. அல்லது தான் இளவரசப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்ன செய்வது என்கிற நிலையில் யுவராஜாபோல் பார்த்தாரா என்று பார்த்தால்… பரதன் போய் ராமரை பார்க்கும்போது ஒரு மரத்திற்கடியில் ஒரு கால் மேல் இன்னொரு கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

அது எப்படி இருக்கிறது எனில் சாட்சாத் தட்சிணாமூர்த்தி உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது. அப்போது பரதன் ராமரை ஸ்துதி பண்ணும்போது குரோ… என்றும் குரு என்றும்தான் ஸ்துதி பண்ணுகிறார். அங்கு ராமரை பார்த்தவுடனே அண்ணா என்றோ யுவராஜா என்றோ வரவில்லை. அந்த காட்டிலுள்ள மரத்தின் அடியில் பார்க்கும்போது குரு என்று சொல்லிதான் நமஸ்காரம் செய்கிறார். குரு என்று எப்போது சொல்லி விட்டாரோ அப்போதே ராமருடைய சந்திப்பு அண்ணா தம்பி சந்திப்பாக இல்லாமல், குரு சிஷ்ய சம்மந்தம் அங்கு நிகழ்கிறது. குரு சிஷ்ய சம்மந்தம் நிகழும்போது குரு அங்கு என்ன பிரசாதம் பண்றார். சிஷ்யன் குருவிடமிருந்து என்ன கேட்டு வாங்கிக் கொள்கிறாரெனில், உங்களுடைய பாதுகையை கொடுங்கள்.

உங்களுடைய திருவடியை கொடுங்கள் என்று அந்த திருவடியை பாதுகையை தன்னுடைய சிரசில் தரித்துக் கொள்கிறார். ஞான சொரூபமாக இருக்கக்கூடிய பாதுகையை நம்முடைய அஞ்ஞானம் என்கிற திரை விலகி ஞானம் பிரகாசிப்பதற்காக தன்னுடைய சிரசில் தாங்கிக் கொண்டே வருகிறார். இப்படி பரதன் பாதுகையினுடைய பிரபாவத்தை காண்பித்துக் கொடுப்பதால்தான் பரதனை நமஸ்கரிக்கிறார், வேதாந்த தேசிகர். பரதன்தான் நமக்கு பிரதம குரு. இந்த விஷயத்தில் பரதன்தான் நமக்கு முதல் குரு. பாதுகையினுடைய பிரபாவத்தை காண்பித்துக் கொடுத்த பிரதமாச்சார்யான் யாரெனில் அது பரதன்தான். பரதாழ்வார் தன்னுடைய சிரசில் அந்த பாதுகையை தாங்கிக் கொண்டு வருவதால் அந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் அந்த பாதுகையின் பிரபாவம் தெரிய வருகிறது.

இப்போது இந்த விஷயம் எதை உணர்த்துகிறது?

இப்போது நமக்கு இதிலிருந்து ஒரு விஷயம் தெரிய வருகிறது. அதாவது குருவிடமிருந்து என்ன வாங்க வேண்டுமென்று பரதன் கற்றுக் கொடுக்கிறான். அதாவது குருவிடமிருந்து அவருடைய பாத கமலங்களை… அந்த பாதுகையையே நாம் எப்போதும் பிரசாதமாக பெற்றுக் கொள்ள வேண்டும். பிரகலாதன் கூட நரசிம்மனிடத்தில் இறுதியாக அந்த பாத கமலங்களையே பிரசாதிக்க வேண்டு மென்று கேட்கிறான். ராமருடைய பாதுகையை சிம்மாசனத்தில் வைத்தே அதற்குப் பிறகு ஆட்சி நடக்கிறது. ராமர் பதினான்கு வருடம் கழித்து வரும் வரையில் பாதுகா தேவிதான் ராஜ்ஜிய பரிபாலனம் செய்கிறாள். இங்கு பாதுகையை ஏன் தேவி என்று சொல்ல வேண்டுமெனில், பகவானிடம் தோன்றுகின்ற தயை… அது இனிமேல் பாதுகை மட்டுமல்ல. அது தயையோடு இணைந்த தேவி… தயா தேவி… பகவானிடம் நம்மை சேர்க்கக் கூடிய புருஷகாரம். எதெல்லாம் நம்மை பகவானோடு சேர்த்து வைக்குமோ அவையாவும் தயா தேவியின் சொரூபமே. தயாசதகம் என்று சொல்கிறோமே, இதை பாதுகா ராஜ்ஜியம் என்றே அழைத்தார்கள்.

சடாரியே பாதுகைதான்

இன்னும் சொல்லப்போனால் பாதுகையை நாம் சடாரி என்றுதானே சொல்கிறோம். பாதுகா தேவி சொரூபத்தில் இருப்பது நம்மாழ்வார்தானே. பராங்குச நாயகி. ஆழ்வாரையே நாம் நாயிகா பாவத்தில்தானே பார்க்கிறோம். குழந்தையான ஜீவன் வெளியே வரும்போது இந்த உலகத்திலுள்ள சடம் என்கிற வாயு நம்முடைய உச்சந்தலையை தொடும்போது சுபாவமான ஞானத்தை மறந்து மீண்டும் இந்த சம்சார சுழலில் சிக்கிக் கொள்கிறது என்று சொல்கிற வழக்கம் உண்டு. ஆனால், ஆழ்வார் அவதரிக்கும்போது எல்லா ஜீவன்களும் ஜனிப்பது போன்ற ஜனனம் கிடையாது. ஆழ்வார் நமக்கு இங்கு ஞானத்தையும் பக்தியையும் போதிப்பதற்காகவே அவதாரம் செய்கிறார். அதனாலேயே அவரை சட வாயு தொட முடியாது. அவர் கர்ப்பத்திலிருந்து வெளியே வரும்போதே சட வாயுவை எட்டி உதைத்துவிட்டு வெளியே வந்ததுனாலதான் சடகோபன் என்கிற பெயர் வந்தது. சடாரி… அரி என்றால் எதிரி என்று அர்த்தம். சட வாயுவிற்கு யார் எதிரியோ அவர் சடாரி. அந்தப் பாதுகையைத்தான் நம்முடைய தலைமீது பெருமாள் கோயிலில் வைக்கிறார்கள். ‘பாதுகா பாதுகா பாதுகா’ என்று சொல்லிப் பாருங்கள், பாதுகாப்பா என்று வரும். ஆம்! இறைவனின் பாதுகைகளை நம் சிந்தையில் இருத்துவோம், அவை நம்மை நிச்சயம்
காப்பாற்றும்.

ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்

The post குரு தத்துவம் appeared first on Dinakaran.

Tags : Ramananda ,Kabir ,Yogi ,Ramananda… ,Kabirdasara… ,Guru ,Tattvam ,
× RELATED மீண்டும் சர்ச்சை ஆளுநர் மாளிகை...