×
Saravana Stores

பள்ளியை விட்டு முன்அனுமதியின்றி மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது: ஒழுங்கீனமாக நடந்தால் குற்றவியல் நடவடிக்கை, பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர்களை NSS, NCC, Scout மற்றும் Guide, JRC போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் காரணமாக பள்ளியை விட்டு வெளியே மாவட்ட அளவிலோ அல்லது மாநில அளவிலோ அழைத்துச் செல்ல நேரிடும் பொழுது ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பெற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று அதன் பிறகு மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலரின் முன் அனுமதியின்றி மாணவ, மாணவியரை பள்ளியைவிட்டு வெளியே அழைத்துச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவியரை வெளியே அழைத்துச் செல்லும் பொழுது 10 மாணவர்களுக்கு ஒரு ஆண் ஆசிரியர் எனவும் 10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை எனவும் உடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் மாணவர், மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்பவர்கள் மீது காவல்துறை வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பள்ளியை விட்டு முன்அனுமதியின்றி மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது: ஒழுங்கீனமாக நடந்தால் குற்றவியல் நடவடிக்கை, பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,Tamil Nadu Department of School Education ,NSS ,NCC ,Scout and Guide ,JRC ,
× RELATED திண்டுக்கல்லில் கலை திருவிழா போட்டி