×

அகில இந்திய ஹாக்கிப் போட்டி; இன்று காலிறுதி போட்டியில் தமிழ்நாடு – உபி. மோதல்

சென்னை: அகில இந்திய அளவிலான ஆண்கள் ஹாக்கிப் போட்டியின் 14வது தொடர் சென்னையில் நடக்கிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒடிஷா உட்பட 31 அணிகள் பங்கேற்றன. இந்த அணிகள் மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றன.

இந்நிலையில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் முடிந்தன. அதன் அடிப்படையில் 8 பிரிவுகளிலும் முறையே முதல் இடத்தை கைப்பற்றிய பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிஷா, உத்ரபிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. இ பிரிவில் இடம் பெற்றிருந்த புதுச்சேரி 2வது இடத்தை பிடித்ததால் காலிறுதி வாய்ப்பை இழந்தது. போட்டியில் நேற்று ஓய்வு நாள். இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

முதல் ஆட்டத்தில் பஞ்சாப்-மணிப்பூர், 2வது ஆட்டத்தில் அரியானா-மகாராஷ்டிரா, 3வது ஆட்டத்தில் தமிழ்நாடு-உத்தரப்பிரதேசம், 4வது ஆட்டத்தில் கர்நாடகா-ஒடிஷா அணிகள் களம் காண இருக்கின்றன.
இவற்றில் வெற்றி பெறும் அணிகள் நாளை மறுநாள் அரையிறுதியில் விளையாடும். இறுதி ஆட்டம் நவ.16ம் தேதி நடக்கும். தமிழ்நாடு-உத்தரப்பிரதேசம்: இன்று காலிறுதியில் மோதும் இந்த 2 அணிகளும் லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை. சி பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு விளையாடிய 3 லீக் ஆட்டங்களில் 2ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் செய்தது. அதுவும் அந்தமானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் 43 கோல்கள் அடித்து சாதனை படைத்தது.

அதே நேரத்தில் உத்தரப்பிரதேசம், தான் விளையாடிய 3 லீக் ஆட்டங்களிலும் வென்றுள்ளது. அந்த, 3 ஆட்டங்களிலும் மொத்தம் 21கோல்தான் அடித்துள்ளது. மாறாக, தமிழ்நாடு மொத்தத்தில் 52கோல்களை அள்ளியிருக்கிறது. இதில் கேப்டன் கார்த்தி செல்வம் மட்டும் 15 கோல்களை அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

நேருக்கு நேர்
தமிழ்நாடு-உத்தரப்பிரதேச அணிகள் பல்வேறு போட்டிகளில் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் தமிழ்நாடு அணிதான் வென்றுள்ளது. அந்த ஆட்டங்களில் முறையே 3-2, 3-1, 1-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு வெற்றி வாகை சூடியிருக்கிறது.

The post அகில இந்திய ஹாக்கிப் போட்டி; இன்று காலிறுதி போட்டியில் தமிழ்நாடு – உபி. மோதல் appeared first on Dinakaran.

Tags : All India Hockey Tournament ,Tamil Nadu ,UP ,Chennai ,All India Men's Hockey Tournament ,Puducherry ,Karnataka ,Andhra Pradesh ,Kerala ,Odisha ,Dinakaran ,
× RELATED போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில்...