செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. அதேபோல், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்ய கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், நந்திவரம், பொத்தேரி, பரனூர், வீராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார துறை சார்பில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும் நள்ளிரவு முதலே பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து ஒரு குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இந்நிலையில், நேற்று காலை முதலே செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் பள்ளி மற்றும் கல்லூரி, வேலைகளுக்கு வெளியே செல்லும் நபர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் ரெயின்கோட், குடை போன்றவற்றை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
* 31 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின
தமிழகத்தில் பருவ மழை துவங்கி உள்ளநிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏராளமான ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகள் அதிகம் நிறைந்த மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 528 ஏரிகள் உள்ளன. இதில், தற்போது வரை 31 ஏரிகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. மேலும், 75 சதவீதத்திற்கு மேல் 64 ஏரிகளும், 50 சதவீதத்திற்கு மேல் 115 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு மேல் 163 ஏரிகளும் நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.