சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நெருங்கியுள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சியில் 4 நாட்கள் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று மதியம் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.
இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 செ.மீ. வரை மழை பெய்யலாம் என வானிலை மையம் கணித்துள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று கணமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே போல் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர் , ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுப்பு!! appeared first on Dinakaran.