×
Saravana Stores

பணி நேரத்தில் டாக்டர்கள் இல்லாவிட்டால் உடனடி நீக்கம்: சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை

கோவை: ‘பணி நேரத்தில் டாக்டர்கள் இல்லாவிட்டால் உடனடியாக நீக்கப்படுவார்கள்’ என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் (ஜைகா) ரூ.13 கோடி மதிப்பிலான அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 708 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதில், 500 இடங்களில் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு உதவியாளர் என 4 பணியிடங்கள் கலெக்டர் தலைமையிலான மாவட்ட ஹெல்த் சொசைட்டியின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மையம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் செயல்பட வேண்டும். கோவை மாநகராட்சி பகுதியில் 4 இடங்களில் நான் ஆய்வு செய்தபோது 2 நலவாழ்வு மையங்களில் ஒன்றில் டாக்டர் அருகில் சென்று இருப்பதாகவும், ஒன்றில் டாக்டர் அனுமதி பெற்று விடுப்பில் இருப்பதாகவும் கூறினர்.

இது தொடர்பாக விசாரணை செய்ய மாநகராட்சி கமிஷனருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மையங்களில் டாக்டர்கள் மாலை நேரத்தில் பணிக்கு வருவதில்லை என புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் தான் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனை திறக்கப்படாமல் இருந்தாலும், தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்தாலும் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 208 நலவாழ்வு மையங்களில், 200 மையங்கள் திறக்க தயார் நிலையில் இருக்கிறது. கொரோனா காலத்தில் பணியாற்றிய 934 செவிலியர்கள் ஒப்பந்த பணியில் சேர்க்கப்பட உள்ளனர். அடுத்த வாரம் 2 ஆயிரம் செவிலியர் இடம் முறைப்படுத்தப்பட்டு, செவிலியர் காலிப்பணியிடம் இல்லை என்ற நிலை கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாய் புற்றுநோய் பரிசோதனை’
கோவை தனியார் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘புற்றுநோய் பாதிப்பை ஆரம்பநிலையில் கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். அதுவே, 3-வது, 4வது நிலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதனால் முதல்வர் தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு கண்டறிய ஒரு தீவிர நடவடிக்கை எடுக்க கூறி உத்தரவிட்டார். அதன்படி, ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் 109 பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை ஓரிரு மாதங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் விபத்து நடந்த 48 மணி நேரத்தில் இலவசமாக வழங்கப்படும் சிகிச்சைக்கு உச்சவரம்பு தொகை ஒரு லட்சம் என்ற நிதி போதாது என மருத்துவமனைகள் கோரிக்கைகள் விடுத்தன. இதையடுத்து, முதல்வர் ரூ.2 லட்சமாக நிதி உயர்த்தி அறிவித்துள்ளார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது என்றார்.

The post பணி நேரத்தில் டாக்டர்கள் இல்லாவிட்டால் உடனடி நீக்கம்: சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Health Minister ,Coimbatore ,M. Subramanian ,Coimbatore Government Hospital ,Japan International Cooperation Agency ,JICA ,Dinakaran ,
× RELATED 2021ம் ஆண்டுக்கு பின் வெளிநோயாளிகள்...