×
Saravana Stores

போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை விபத்தில் பாதித்தோருக்கு விழிப்புணர்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் உட்கோட்டம் பகுதியில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகை மற்றும் இதர ஆவணங்கள் பெறுவதற்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம், மாமல்லபுரம் போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல்துறை சார்பில், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் விநாயகம், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது அனுபவங்கள் குறித்து அதிகாரிகளிடம் கலந்துரையாடி, தங்களுக்கான நிவாரண உதவிகளை விரைந்து வழங்க கேட்டுக்கொண்டனர். மேலும், விபத்தில், பாதிக்கப்பட்டோர் எப்படி வழக்குகளை கையாள வேண்டும் என்பது குறித்தும், அதற்கான விளக்கங்களை காவல் துறை அதிகாரிகள் எடுத்து கூறினர். திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் விநாயகம் பேசுகையில், ‘விபத்து நடந்து இறப்பு நேரிட்டால் காவல்துறைக்கு கொடுக்க வேண்டியது 2 சான்றிதழ்கள் மட்டுமே.

ஒன்று வாரிசு சான்று மற்றொன்று இறப்பு சான்றிதழ் அல்லது குடும்பப் புகைப்படம். இதை மட்டும் கொடுத்தால் ரூ.1 லட்சம் வரை காவல்துறை மூலமாக பெற்று தருகிறோம். இது அரசு மூலமாக வரும். இதுதவிர, பாதிக்கப்பட்டோர் தனிப்பட்ட முறையில் வழக்கறிஞரை நியமித்து, நீதிமன்றத்தில் வழக்குப்போட்டு இறந்த நபருடைய வயசு, அந்த குடும்பத்திற்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பெற முடியும்.

இதற்கு, பெரிய அளவிலான டாக்குமெண்ட் கொடுக்க வேண்டியது இல்லை. இதற்கு, காவல் துறையில் நாங்களே இலவசமாக பதிவு செய்து தருகிறோம். விபத்தில் இறந்தவர் குடிபோதையிலோ அல்லது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருந்தால் நிவாரணம் கிடைக்காது.  வேலூரில் நிச்சயதார்த்தம் ஒருவர் நிச்சயித்த பெண்ணை பைக்கில் சென்னைக்கு அழைத்து சென்று மீண்டும் வேலூரில் விட்டு விட்டு வரும்போது இரவு 1 மணிக்கு ஹெல்மட் போட்டுக் கொண்டு லாரி சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். தலை லாரி சக்கரத்திலும், உடல் சற்று தொலைவிலும் கிடந்தது.

அப்போது, அந்த குடும்பம் எந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கும் என்று நினைத்து பாருங்கள். கண் இமைக்கும் நேரத்தில் ரத்தமும், சதையும் ரோட்டில் தான் கிடக்கும். அப்போது, அந்த வழியாக செல்பவர்கள் அதனை போட்டோ மற்றும் வீடியோ எடுப்பார்கள். ஆனால், விபத்தில் சிக்கி விழுந்து கிடப்பவரை தூக்க யாரும் வர மாட்டார்கள்.

இதுபோன்ற, விபத்துகளை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ரோட்டில் செல்லும்போது குறைவான வேகத்தில், பாதுகாப்பாக செல்ல வேண்டும்’ என்றார். அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் எழுந்து நின்று கை தட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை விபத்தில் பாதித்தோருக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Traffic Police Department ,Mamallapuram ,Mamallapuram Utkottam ,Pooncheri ,Traffic Police ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் பவழக்காரன் சத்திரத்தில்...