×
Saravana Stores

3 வருட போராட்டம், கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம் வால்பாறை கால்பந்தாட்ட மைதானம் சீரமைக்கப்படுமா?

*மைதானத்தை ஆக்கிரமிப்பு செய்த குடியிருப்பு வாசிகள்

வால்பாறை : வால்பாறை கால்பந்து மைதானத்தை சீரமைக்க வேண்டும் என 3 வருடமாக விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை சிறுவர் பூங்கா பகுதியில் கால்பந்து விளையாட்டு மைதானம் உள்ளது. நகராட்சி சார்பில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பொழுது போக்கிற்க்காக இந்த பகுதி ஒதுக்கப்பட்டது. வாபாறை பகுதியில் உள்ள பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் அனைவரும் இந்த நகராட்சி கால்பந்து மைதானத்தில் விளையாடி வந்தனர்.

மேலும், வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட்களிலும் கால்பந்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நகராட்சி கால்பந்து மைதானத்தில் கால்பந்து போட்டிகளை ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடத்தி வந்தனர். மேலும், அகில இந்திய அளவில் கால்பந்து போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டன. இந்நிலையில், சிறுவர் பூங்கா பகுதியில் பொழுதுபோக்கிற்கு கொடுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பு வாசிகள் வீடுகளை கட்டி உள்ளனர்.

தற்போது, கால்பந்து மைதானம் வயல் வரப்புகளாக உள்ளது. இதனால், கால்பந்து வீரர்கள் விளையாட முடியாமல் கவலையடைந்து வருகின்றனர். மேலும், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி கால்பந்து மைதானத்தை சீரமைத்து தரவேண்டும், மைதானத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கால்பந்து சங்க நிர்வாகிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, வால்பாறை நகராட்சி சார்பில் கால்பந்து சங்க நிர்வாகிகளிடம் உடனடியாக கால்பந்து மைதானம் சீரமைத்து, மைதானத்தை ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். பின்னர், போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆனால், இன்று வரை கால்பந்து மைதானம் சீர்செய்யப்படாமல் உள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படாமல் உள்ளது. கால்பந்து விளையாட்டுக்கு பெயர் எடுத்த வால்பாறை, தற்போது கால்பந்து விளையாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ளது.

மேலும், மாணவர்களின் கால்பந்து விளையாட்டு கேள்விக்குறியாகி உள்ளது. விளையாட்டிற்கு முதல் உரிமை கொடுக்கும் துணை முதல் அமைச்சர் உடனடியாக வால்பாறை நகராட்சி கால்பந்து மைதானத்தை புதுப்பித்து தர உத்தரவிட வேண்டும் என பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எதிர் வரும் காலங்களில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள் பயிற்சி பெற வழி வகை செய்ய வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

The post 3 வருட போராட்டம், கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம் வால்பாறை கால்பந்தாட்ட மைதானம் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Valparai ,Valparai Children's Park ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பச்சை பசேல் என மாறிய சோலை வனங்கள்