×

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்

திருமயம், நவ.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை பருவமழை சரியாக பெய்யாத நிலையில் விவசாயிகளிடையே பருவமழையின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதி விவசாயிகள் கண்மாய் பாசன நீரை பயன்படுத்தி மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் பருவமழை சரிவர செய்யாத காரணத்தால் தற்போது அப்பகுதியில் கிணற்றுப் பாசன விவசாய நிலப்பரப்பு அதிகரித்துள்ளது.

அதேசமயம் தொடர்ந்து குறைந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருவதால் திருமயம், அரிமளம் பகுதியில் குடிநீருக்கே மக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் விவசாயத்திற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் நீரின்றி காணப்படுவதாலும் ஒரு சில கிணறுகளில் குறைந்த அளவு நீரே இருப்பதாலும் விவசாயம் என்பது திருமயம், அரிமளம் பகுதிகளில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனிடையே ஒரு சில விவசாயிகள் பருவ மழை தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன் நாற்றங்காலில் விதை நெல் விதைப்பு செய்து வளர்ந்து வரும் நெற்பயிர்களை பருவ மழை பெய்யும் போது உள்ள மழை நீரை கொண்டு சம்பா நடவு விவசாயம் செய்து வருகின்றனர். இவ்வாறு செய்யும் விவசாயம் மதில் மேல் பூனை போல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். காரணம் பருவ மழை பொய்த்து போகும் பட்சத்தில் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே அரிமளம், திருமயம் பகுதியில் விவசாயிகள் நடவு செய்துள்ள சம்பா பயிர்கள், நேரடி நெல் விதைப்பு மூலம் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரின்றி வாடி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் அரிமளம், திருமயம் பகுதியில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் பருவமழை விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பருவமழை அப்பகுதி முழுவதும் சீராகப் பெய்யாமல் ஆங்காங்கே விட்டுவிட்டு பெய்வதால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து இல்லாத போதிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சம்பா பயிர்கள் எதிர்வரும் 10 நாட்களுக்கு நீர் தேவைப்படாது என அப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்நிலையில் மழை பெய்து நீண்ட நாட்களான நிலையில் மாவட்ட முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலேயே காணப்படுகிறது. இதனால் மாவட்ட முழுவதிலும் உள்ள விவசாயிகள் மத்தியில் பருவ மழை மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து அரிமளம், திருமயம் பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது,
திருமயம், அரிமளத்தில் கடந்த வாரம் சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் சில நிமிடங்கள் கனமழையும் பெய்தது. இருந்தபோதிலும் விவசாயிகள் கிணற்று நீரை கொண்டு சம்பா நடவு செய்து பருவமழைக்காக காத்திருக்கும் நிலையில் பருவமழை இதுவரை அப்பகுதியில் பெய்யவில்லை. தினந்தோறும் காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழையாக பெய்து வருகிறது. இது நடவு சம்பா நடவு பயிர்களுக்கு போதுமானதாக இல்லாததால் கிணற்று நீரைக் கொண்டு மட்டுமே அரிமளம், திருமயம் பகுதி விவசாயிகள் சம்பா பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். எனவே பருவமழை பெரிய அளவில் பொய்யா விட்டால் நீர் பற்றாக்குறை காரணமாக சம்பா நடவு கருகும் நிலை ஏற்பட்டும்.

மேலும் ஏற்கனவே கிணற்று நீரை கொண்டு நடவு செய்த நெற்பயிர்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் அரிமளம், திருமயம் பகுதி விவசாயிகள் பருவமழை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது அரிமளம், திருமயம் பகுதிகளில் குறைந்த அளவு மழையே பெய்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்ப்புடன் விவசாயிகள் இருக்கும் நிலையில் பருவ மழை பொய்த்துப் போனால் பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரின்றி கருகி வீணாகும் நிலை ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனிடையே தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் எதிர் வரும் நாட்களில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் அரிமளம், திருமயம் பகுதி விவசாயிகள் பருவ மழைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,Thirumayam ,Tirumayam ,Arimalam ,Kanmai ,Pudukottai ,
× RELATED திருமயம், அரிமளம் பகுதியில் விடிய,...