கொள்ளிடம், நவ.12: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ஒரே நேரத்தில் யூரியா வந்ததால் விவசாயிகள் போட்டி போட்டு உரம் வாங்கிச் சென்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதி காவிரி பாசனத்தின் கடைமடை பகுதியாக இருந்து வருகிறது. இப்பகுதியில் பாசனத்திற்கு தண்ணீர் காலம் தாழ்த்தி வந்து சேர்ந்ததால் விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக சம்பா நேரடி விதைப்பு பயிர் மற்றும் நடவு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
சம்பா பயிர் செய்யும் பணி மிக துரிதமாக நடைபெற்று வரும் வேளையில் நேரடி விதைப்பு செய்யும் பணியும் சில இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடவு செய்யும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு மேலாகவும் வளர்ந்த நிலையிலும் நெற்பயிர் இருந்து வருகிறது. ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் உழவு செய்யும் பணியும்,வயலுக்கு உரமிடும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கு அனைத்து விவசாயிகளுக்கும் யூரியா உரம் தேவைப்படுகிறது. நெற்பயிர் நன்கு செழித்து வளர யூரியா அவசியம் தேவைப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் யூரியா உரம் தேவைப்படுவதால் உரத்தின் தேவை அதிகமாகிறது.
அடி உரமும் விவசாயிகளுக்கு போதிய அளவுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டு வருகிறது.இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் போதிய அளவுக்கு விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டதால் தொடர்ந்து உரங்கள் கேட்டு விவசாயிகள் வற்புறுத்தி வந்தனர். இந்நிலையில் கொள்ளிடம் பகுதியில் உள்ளதொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு கடந்த இரண்டு தினங்களாக யூரியா மற்றும் அடி உர மூட்டைகள் லாரிகள் மூலம் வந்து இறக்கி இருப்பு வைக்கப்பட்டன. இதனைை அறிந்த விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் சென்று ஆதார் அட்டையை காண்பித்து உரத்தை வாங்கி செல்கின்றனர். ஒரே நேரத்தில் யூரியா வந்ததால் விவசாயிகள் யூரியா வாங்கி செல்வதற்கு கூட்டமாக குவிந்தனர். ஒவ்வொரு விவசாயிக்கும் தேவைப்படும் உரை மூட்டைகளை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
The post ஒரே நேரத்தில் விவசாய பணிகள் நடப்பதால் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் யூரியா வாங்க குவிந்த விவசாயிகள் appeared first on Dinakaran.