×

மாற்று இடம் வழங்க வேண்டும் பழநியில் சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்

 

பழநி, நவ. 12: தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு வரும் வியாபாரிகளிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவாரம் கிரிவீதி பகுதியில் உள்ள சாலையோரங்களில் ஏராளமான கடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தற்போது நீதிமன்ற உத்தரவின் காரணமாக கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டுள்ளன. கிரிவீதியில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

சுற்றுலா பஸ் நிலைய வளாகத்தில் மாற்று இடம் வழங்க வேண்டுமென சாலையோர வியாபாரிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. கார்த்திகை மாத ஐயப்ப சீசன் துவங்க உள்ள நிலையில் மாற்று இடம் உடனடியாக ஒதுக்க வேண்டும். இதுதொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் தலைமை செயலககத்தில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகளை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் நேற்று பழநி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், உடன்பாடு ஏற்படாததால் நேற்று மாலை வரை போராட்டம் நீடித்தது.

The post மாற்று இடம் வழங்க வேண்டும் பழநியில் சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Thandayuthapani Swamy Temple ,Tamil Nadu ,Adiwaram Giriveedhi ,
× RELATED பழநி மூலிகை பூங்கா பயன்பாட்டிற்கு வருமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு